சிறுத்தை தாக்கியபோது நானும் எதிர்த்து தாக்கினேன்... பெயிண்டர் பரபரப்பு தகவல்

திருப்பத்தூரில் பள்ளி வளாகத்தில் புகுந்து பரபரப்பை ஏற்படுத்திய சிறுத்தை, அங்கு பெயிண்ட் அடித்துக்கொண்டிருந்த நபரையும் தாக்கியது.
சிறுத்தை தாக்கியபோது நானும் எதிர்த்து தாக்கினேன்... பெயிண்டர் பரபரப்பு தகவல்
Published on

திருப்பத்தூர்,

திருப்பத்தூரில் கடந்த 14-ந் தேதி சிறுத்தை ஒன்று பெண்கள் பள்ளி வளாகத்தில் புகுந்தது. அப்போது அங்கு சுற்றுச்சுவருக்கு பெயிண்டு அடித்துக் கொண்டு இருந்த புத்தகரம் கிராமத்தை சேர்ந்த கோபால் (வயது 67) என்பவரை சிறுத்தை தாக்கியது. இதில் காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நான் அந்த பள்ளியில் சுற்றுச்சுவருக்கு பெயிண்டு அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன். சுமார் 4 மணி அளவில் பெயிண்டு அடிக்கும் பணியை முடித்துவிட்டு உடைகளை மாற்றிக்கொண்டு இருந்தபோது நான் இருந்த இடத்தில் இருந்து 20 அடி தொலைவில் சுற்றுச்சுவரின் மேல் சிறுத்தை ஒன்று நின்றது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். சுதாரித்துக்கொண்ட நான் சிறுத்தை போன்ற விலங்குகள் கழுத்து பகுதியை தான் குறி வைத்து தாக்கும் என்பதால் நான் வைத்து இருந்த வேட்டியை கொண்டு எனது உடலை மூடியவாறு கீழே அமர்ந்து விட்டேன். அந்த நேரத்தில் சிறுத்தை பாய்ந்து வந்து எனது காது பகுதியை தாக்கியது. அப்போது சிறுத்தையிடம் இருந்து தப்பிக்க அதன் கண்ணில் தாக்கினேன். இதையடுத்து என்னை தாக்குவதை விட்டுவிட்டு சிறுத்தை சென்றுவிட்டது.

பின்னர் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டு இருந்த மாணவிகளிடம் சென்று என்னை சிறுத்தை தாக்கி விட்டது. வகுப்பறைக்குள் செல்லுங்கள் என சத்தமாக கூறினேன். இதையடுத்து மாணவிகளை பள்ளி வகுப்பறையில் வைத்து ஆசிரியைகள் பூட்டினர். பின்னர் என்னை ஆட்டோ மூலம் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு எனக்கு தலையை சுற்றி 28 தையல்கள் போடப்பட்டது.

மேலும் எனது காதில் சிறிது பகுதி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. சிறுத்தை தாக்கி காயமடைந்த என்னை வனத்துறை ஊழியர் ஒருவர் மட்டுமே வந்து பார்த்தார். அரசு அதிகாரிகள் யாரும் வரவே இல்லை. தூங்கும்போதுகூட சிறுத்தை நினைவாகவே உள்ளது. என்னால் எந்த பணியும் செய்ய முடியவில்லை. எனக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்."

இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com