

திருவாரூர்,
திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வளாகத்தில், தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்ற 7 பேராசிரியர்களின் வீடுகளில் பூட்டை உடைத்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நீலக்குடி பகுதியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.இப்பல்கலைக்கழக வளாகத்திலேயே பேராசிரியர்களுக்கான குடியிருப்புகளும் அமைந்துள்ளன. அங்கு நூற்றுக்கணக்கான பேராசிரியர்கள் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதையடுத்து, குடியிருப்புகளில் வசித்து வந்த பேராசிரியர்கள் பலர், வீடுகளை பூட்டிவிட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், ஆள் இல்லாததை பயன்படுத்தி 7-க்கும் மேற்பட்ட பேராசிரியர்களின் வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர், பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
தீபாவளி விடுமுறை முடிந்து பேராசிரியர்கள் தங்களது குடியிருப்புகளுக்கு திரும்பியபோது, வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட 7 பேராசிரியர்களும் நன்னிலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.