அடியோடு சீரழிந்திருக்கும் சுகாதாரத்துறையை மீட்டெடுப்பது எப்போது? - டி.டி.வி. தினகரன் கேள்வி

அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள், செவிலியர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தவறான சிகிச்சை வழங்கப்பட்டதால் தென்காசியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

இதே மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆம்புலன்ஸ் வாகனம் இல்லாததால் உயிரிழந்த தாயின் உடலை அவரது மகன் சுமார் 15 கி.மீ தூரம் சைக்கிளில் எடுத்துச் சென்ற அவலம் நடைபெற்ற நிலையில், தற்போது தவறான சிகிச்சையால் 4 வயது சிறுவன் உயிரிழந்திருப்பது அம்மருத்துவமனையின் அலட்சியப் போக்கு தொடர்வதையே வெளிக்காட்டுகிறது.

அரசு மருத்துவமனையில் நிலவும் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை மற்றும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாட்டை பலமுறை சுட்டிக் காட்டியும் அதனை போக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சுகாதாரத்துறையே அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் உயிரிழப்புகள் தொடர்கதையாகி வருவதற்கு முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

எனவே, சிறுவன் உயிரிழப்பு தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி தவறான சிகிச்சை அளிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால், அதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, இனியாவது அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள், செவிலியர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com