சென்னையில் வெயிலின் தாக்கம் எப்போது குறையும்? - வெளியான தகவல்

வெயிலின் தாக்கத்தால் சென்னை பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது.
சென்னையில் வெயிலின் தாக்கம் எப்போது குறையும்? - வெளியான தகவல்
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. எல்-நினோவின் தாக்கம் காரணமாக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பத்தின் கொடுமை அதிகரித்துள்ளது. அதிலும் சென்னை பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது.

கடந்த 1-ந்தேதியில் இருந்து தினமும் 104 டிகிரிக்கு குறையாமல் வெயில் சுட்டெரித்து வருவதை பார்க்க முடிகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கியும் வெயில் குறைந்தபாடில்லை. அந்த வரிசையில் 6-வது நாளாக நேற்றும் சென்னை மீனம்பாக்கத்தில் 104.72 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 103.82 டிகிரி யும் வெயில் கொளுத்தியது.

அதாவது இயல்பைவிட குறைந்தது 2 செல்சியஸ் முதல் 3.4 செல்சியஸ் வரை வெப்பம் உயர்ந்து கொண்டு இருக்கிறது. வெப்பத்தின் உஷ்ணத்தால் சென்னைவாசிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தொடரும் வெயிலின் உக்கிரத்துக்கு என்ன காரணம்? என்பது குறித்தும், இதன் தாக்கம் எப்போது குறையும்? என்பது குறித்தும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:- பொதுவாக தென்மேற்கு பருவமழை தொடங்கியதும் வெப்பம் சற்று குறையும். ஆனால் தற்போது பருவமழை தொடங்கினாலும், வங்கக்கடலில் எந்தவித தாழ்வுப்பகுதியும் உருவாக வில்லை. அவ்வாறு தாழ்வுப்பகுதி உருவாகும்போது மேகக் கூட்டங்கள் வந்து வெப்பம் குறையும். அதற்கான சூழல் இப் போது ஏற்படவில்லை. இதனால்தான் சென்னையில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.

இன்னும் 10 நாட்களுக்கு வெப்ப உஷ்ணம் இருக்கத்தான் செய்யும். இடையில் வருகிற 10-ந்தேதிக்கு பிறகு வெப்பச்சலன மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அந்த மழை வந்தால் ஓரளவுக்கு வெப்பம் குறைவதற்கான சூழல் ஏற்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com