கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் எப்போது பயன்பாட்டிற்கு வரும்..? - அமைச்சர் சேகர்பாபு பதில்

கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்திற்கான ரூ.20 கோடியை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமே ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சி.எம்.டி.ஏ. சார்பில் திரு.வி.க. நகர் சந்திரயோகி சமாதி சாலையில் புதிய சமுதாய நலக்கூடம், திரு.வி.க. நகர் மற்றும் பெரியார் நகர் பஸ் நிலையம், சேத்துப்பட்டு நவீன சலவைக் கூடம் ஆகியவற்றின் கட்டுமான பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வடசென்னை வளர்ச்சி திட்டம் மூலமாக இதுவரை 282 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வளர்ச்சிப் பணிகளில், முக்கியமான ஒன்று பஸ் நிலையங்களை மேம்படுத்தும் பணியாகும். குத்தம்பாக்கம் பஸ் நிலையம் புதிய அடிப்படை வசதிகளுடன் குத்தம்பாக்கம் பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. அதேபோல், செங்கல்பட்டில் பஸ் நிலையம் தற்போது முழுமையாக உருவாகிக் கொண்டிருக்கிறது.

மகாபலிபுரத்தில் புதிய பஸ் நிலையம் வடிவமைக்கப்பட்டு பணிகள் நடைப்பெற்று வருகின்றன. ஆவடியில் பயணிகளுக்கு வசதியாக புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. பெரியார் நக பஸ் நிலையம், கொளத்தூர்தொகுதிக்குட்பட்ட மற்றொரு பஸ் நிலையமும், செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

முல்லைநகர், உதயசூரியன், ஆர்கே நகர், அம்பத்தூர் ஆகிய இடங்களில் கட்டப்பட்டு வரும் பஸ் நிலையங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இவை அனைத்தும் செப்டம்பர் மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். ஒட்டுமொத்தமாக ரூ.200 கோடி செலவில் 12-க்கும் மேற்பட்ட மாநகர் பஸ் நிலையங்களை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

முடிச்சூர் ஆம்னி பஸ் நிலையம் திறக்கப்பட்டு 8 மாதங்கள் ஆகின்றன. அந்த நிலையம் தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதை விரைவில் தீர்க்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆம்னி பஸ் உரிமையாளர்கள் ஒப்புதல் அளித்து தான் முடிச்சூர் பஸ் நிலையம் அமைக்கப்பட்டது.

ஆனால் பின் சில காரணங்களை முன்வைத்து அவர்கள் அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர மறுத்துள்ளனர். இருப்பினும், குத்தம்பாக்கம் பஸ் நிலையம் 2 அல்லது 3 மாதங்களில் திறக்கப்பட்டவுடன் இந்த பிரச்சினைக்கும் ஒரு தீர்வு கிடைக்கும். கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்திற்கான ரூ.20 கோடியை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமே ஒதுக்கியுள்ளது. அந்த பணியும் முடிந்து செப்டம்பர் மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்" என்று கூறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com