குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்? இஸ்ரோ தலைவர் பதில்

அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் குலசேகரன்பட்டினத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் கூறினார்.
திருச்செந்தூர்,
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. அங்கிருந்துதான் இந்தியாவின் செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு வருகின்றன. தற்போது நாட்டின் 2-வது ஏவுதளத்தை அமைக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டிருக்கிறது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. ரூ.986 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கட்டுமான பணிகளுக்கு 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்தது. இந்த பணிகள் நிறைவடைந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி, அடிக்கல் நாட்டினார். அன்றைய தினமே தற்காலிக ஏவுதள வசதியுடன் குலசேகரன்பட்டினத்தில் இருந்து 500 கிலோ எடைகொண்ட ‘ரோகிணி’ என்ற ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
இதையடுத்து கடந்த 6 மாதமாக ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ள இடத்தில் உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ரூ.100 கோடி மதிப்பில் இந்த பணிகள் நடைபெற உள்ளது. விழாவில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கலந்துகொண்டு ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.இதில் ஸ்ரீஹரிகோட்டா இயக்குனர் பத்மகுமார், இயக்குனர் ராஜராஜன், மகேந்திரகிரி இயக்குனர் ஆசீர்பாக்யராஜ், குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதள திட்ட இயக்குனர் சரவண பெருமாள், மாவட்ட கலெக்டர் இளம்பகவத், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் இஸ்ரோ தலைவர் நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:-குலசேகரன்பட்டினத்தில் 33 கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது.மிக முக்கியமானது ராக்கெட் லாஞ்ச் எனப்படும் ராக்கெட் ஏவுதளம் ஆகும். ராக்கெட் ஏவப்படும் இடம் மற்றும் அதற்கான கட்டுமான பணிகள் ரூ.100 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டுள்ளது.இதற்கான இடம் வழங்கிய தமிழக அரசுக்கும், தமிழக முதல்-அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த ஆண்டுக்குள் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிடும்.
அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் குலசேகரன்பட்டினத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படும். முதலில் சோதனை முறையில் ஒரு சிறிய ரக ராக்கெட் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.இதனை சிறிய அளவிலான ராக்கெட் என்று நினைக்க வேண்டாம். அது 500 கிலோ எடை கொண்டது ஆகும். இஸ்ரோவின் கூட்டு முயற்சி காரணமாக தனியார் ராக்கெட்டுகளும் இங்கிருந்து ஏவப்படும்.
குலசேகரன்பட்டினம் இந்திய வரைபடத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இங்கிருந்து மாதத்துக்கு 2 ராக்கெட்டுகள் வீதம் ஆண்டுக்கு 24 ராக்கெட் வரை ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஸ்ரீஹரிகோட்டா பகுதியில் ஏற்கனவே 2 ராக்கெட் தளம் உள்ளது. மூன்றாவதாக ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பில் மேலும் ஒரு ராக்கெட் தளம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா தற்போது விண்வெளி மையத்திற்கு சென்றுவிட்டு வெற்றிகரமாக திரும்பி வந்துள்ளார். அடுத்த கட்டமாக இந்தியா சார்பில் மனித ரோபோவை விண்வெளிக்கு அனுப்பி வைத்து சோதனை செய்யப்படும்’ இவ்வாறு அவர் கூறினார்.






