குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது? இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி

அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் குலசேகரன்பட்டினத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என கன்னியாகுமரி வந்த இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
இஸ்ரோ தலைவர்
இஸ்ரோ தலைவர் நாராயணன் தனது குடும்பத்துடன் நேற்று கன்னியாகுமரிக்கு வந்தார். அங்கு பூம்புகார் படகு துறையில் இருந்து தனி படகு மூலம் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சென்று பார்வையிட்டார். பிறகு அங்கிருந்து கண்ணாடி நடைபாலம் வழியாக நடந்து சென்று கடலின் அழகை ரசித்ததோடு திருவள்ளுவர் சிலையையும் பார்த்து வியந்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து ரூ.10 ஆயிரத்து 360 கோடியில் இந்தியாவில் உருவாக்கிய செயற்கைகோள் கடந்த ஜூலை மாதம் விண்ணில் ஏவப்பட்டது. இதன் மூலம் ஆண்டின் 365 நாளும் துல்லியமாக செயல்பட்டு 12 நாளுக்கு ஒருமுறை பூமியை சுற்றி வந்து கண்காணித்து பேரிடர், காலநிலை போன்ற தகவல்களை செயற்கைக்கோள் மூலம் அனுப்ப முடியும். இது இந்திய மக்களுக்கு பெருமிதமான தருணம். இன்னும் 60 நாட்களில் இந்த செயற்கை கோள் அனுப்பும் தகவல் பொதுமக்கள் பயன்படும் விதத்தில் இருக்கும். இதுதவிர இந்திய மக்களை பாதுகாக்கவும் இஸ்ரோ உதவி வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் சமயத்தில் சுமார் 25 செயற்கைக்கோள்கள் சிறப்பாகவும், துல்லியமாகவும் செயல்பட்டது. தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயம் என்பதால் கூடுதல் தகவல் என்னால் சொல்ல முடியாது.
தமிழக அரசின் முயற்சியோடு 2,300 ஏக்கர் நிலம் இஸ்ரோ பெற்றுள்ளது. ரூ.1000 கோடியில் நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளம் விரைவில் குலசேகரன்பட்டினத்தில் அமைய உள்ளது. அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து 500 கிலோ எடையுள்ள செயற்கை கோளுடன் ராக்கெட் விண்ணில் ஏவப்படும்.விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கண்ணாடி பாலம் நன்றாக உள்ளது. தமிழக அரசுக்கு எனது பாராட்டுகள்.இவ்வாறு அவர் கூறினார்.






