

சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? என்பது குறித்து தென்காசி தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "கேரளம், தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் இருந்து தென்மேற்கு பருவக்காற்று முற்றிலும் விலக வேண்டும். மேற்கிலிருந்து வீசிய காற்று முற்றிலும் மாறி, தரைமட்டத்திலும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கிலும் வலுவான கிழக்கு அல்லது வடகிழக்கு திசைக்காற்று நிலையாக வீச தொடங்க வேண்டும்.
தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வேண்டும். மேலும் சென்னை எண்ணூர் முதல் உவரி வரையிலான கடலோர பகுதிகளில் 2.5 மில்லி மீட்டருக்கு மேல் மழை பதிவாக வேண்டும். குறிப்பாக எண்ணூர், மாமல்லபுரம், கடலூர், வேதாண்யம், நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய கடலோர பகுதிகளில் தொடர்ந்து 2 நாட்கள் மழை பதிவாக வேண்டும்.
இந்த விதிகளை எல்லாம் பூர்த்தியடையும் பட்சத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகார பூர்வமாக அறிவிப்பு வெளியிடும். இவ்வாறு அவர் கூறினார்.