

ஸ்ரீஹரிகோட்டா,
இஸ்ரோ தலைவர் நாராயணன் பேசியதாவது:- விண்வெளி சீர்திருத்தம் அறிவிக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட முதல் ராக்கெட், அதன் முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக செயற்கைக் கோளை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது.
ராக்கெட் ஏவுதல் என்பது மிகவும் சவாலான விஷயம். அதை முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்றிருப்பதற்கு ஸ்கைரூட் நிறுவனத்துக்கு வாழ்த்துகள். இது ஒரு தொடக்கம் மட்டுமே, இந்த ஆண்டு ஆறு முதல் 7 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம்.
2 ராக்கெட்டுகளின் தயாரிப்பு பணிகள் முடிந்து சோதனை அடிப்படையில் இருக்கின்றன. 5 ராக்கெட்டுகள் முடியும் தருவாயில் இருக்கிறது. குலசேகரன்பட்டினம் ஏவுதளம் அமைக்கும் பணிகள் இந்த ஆண்டு முடிவடைவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அடுத்த ஆண்டு (2027) மார்ச் மாதம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரோ அமைப்பில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பணி முடிவதற்கு முன்பாகவே ஓய்வு பெற்று வெளியேறுவதால் இஸ்ரோவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது' என்றார்.