மாணவர்களை துப்புரவுப் பணியாளர்களாக பயன்படுத்தும் துணிச்சல் எங்கிருந்து வந்தது? நயினார் நாகேந்திரன்

திமுக அரசே அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இப்படியொரு ஏற்பாடு செய்துவைத்துள்ளதா? என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
மாணவர்களை துப்புரவுப் பணியாளர்களாக பயன்படுத்தும் துணிச்சல் எங்கிருந்து வந்தது?  நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர்நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

கடந்த சில தினங்களில் மட்டும் தமிழக அரசுப் பள்ளிகளில் தஞ்சம் புகுந்த விஷப்பூச்சிக்கும், விஷப்பாம்பிற்கும் இரு மாணவர்களை நாம் பலிகொடுத்த துயரத்தின் ரணம் ஆறும் முன்னரே, கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழத்தேனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி அப்பள்ளியின் மேல்நிலைத் தொட்டியை மரத்தின் கிளை வழியே ஏறி சுத்தம் செய்யும் காணொளி வெளியாகி நம்மை மேலும் பதறச் செய்கிறது.

சின்னஞ்சிறு குழந்தைகள் தொட்டியில் உள்ள நீரில் மூழ்கியோ அல்லது தவறி விழுந்தோ ஏதாவது நடக்கக்கூடாத அசம்பாவிதம் நடந்துவிடுமோ என நமக்கு உதறல் எடுக்கிறது. ஆனால், ஏழை எளிய மாணவர்களின் சுயமரியாதையையும், அவர்களின் பாதுகாப்பையும் ஒருசேர அடகு வைப்பது போல, “ஆளு கிடைக்கல அதான்” என்ற ஒற்றை வரியில் இச்சம்பவத்தை எளிதாகக் கடந்து விட்டார் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர்.

ஆள் பற்றாக்குறையைக் காரணம் காட்டி படிக்கும் மாணவர்களை இப்படித் துப்புரவுப் பணியாளர்களாகப் பயன்படுத்தும் துணிச்சல் ஆசிரியர்களுக்கு எங்கிருந்து வந்தது? ஒருவேளை ஊதியம் மிச்சம் என ஆளும் திமுக அரசே அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இப்படியொரு ஏற்பாடு செய்துவைத்துள்ளதா?

அரசுப் பள்ளியில் நமது பிள்ளைகளைச் சேர்த்தால் படிப்பு வருமா எனச் சிந்தித்த தமிழகப் பெற்றோர்களை, அரசுப் பள்ளிக்குச் செல்லும் நமது பிள்ளைகள் உயிரோடு வீடு திரும்புவார்களா என வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு காத்திருக்கும் நிலைக்குத் தள்ளியது தான் கல்வியிற் சிறந்த தமிழ்நாடு என்பதற்கான இலக்கணமா? அப்பா என்ற அடைமொழிக்கு ஆசைப்படும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களின் மீது துறைரீதியான நடவடிக்கை எடுப்பாரா அல்லது எப்பொழுதும் போல கைகட்டி வேடிக்கை மட்டும் பார்ப்பாரா? . என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com