நான்கரை ஆண்டுகளாக எங்கே சென்றீர்கள்..? - செல்வப்பெருந்தகை காரை முற்றுகையிட்ட கிராம மக்கள்

செல்வப்பெருந்தகை காரை முற்றுகையிட்டு அவருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டூர் கிராமத்திற்கு, ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவருமான செல்வப் பெருந்தகை அப்பகுதி மக்களை சந்திப்பதற்காக நேற்று முன் தினம் இரவு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள், செல்வப்பெருந்தகையின் காரை முற்றுகையிட்டு, அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள், “எங்கள் பகுதியில் சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் சரிவர செய்து தரவில்லை. கடந்த நான்கரை ஆண்டுகளாக எங்களை நீங்கள் சந்திக்க வரவில்லை. அப்போது எங்கே சென்றீர்கள். எங்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை. நாங்கள் மீண்டும் உங்களை எப்படி நம்புவது?” என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.அவர்களை செல்வபெருந்தகை சமாதானப்படுத்தி் பேச முயன்றார். ஆனால் பொதுமக்கள் ஆவேசத்துடன் அடுக்கான கேள்விக்கணைகளால் அவரை பேசவிடாமல் திணறடித்தனர்.
இதனால் சூழ்நிலையை அறிந்த செல்வப்பெருந்தகை வேக வேகமாக காரில் ஏறி அங்கிருந்து செல்ல முற்பட்டார். ஆனால் பொதுமக்கள் அவரது காரை செல்லவிடாமல் தடுத்து முற்றுகையிட்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே அங்கிருந்த கட்சி நிர்வாகிகள், காரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்களை சமாதானம் செய்து விலகிப்போக செய்து, செல்வபெருந்தகையின் கார் செல்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர். அதன்பிறகு செல்வப்பெருந்தகை அங்கிருந்து காரில் வேகமாக புறப்பட்டு சென்றார். சட்டமன்ற உறுப்பினரிடம், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






