

சென்னை,
கூட்டணியை விட்டு ஒரே இரவில் முடிவெடுத்து விலகிய எட்டப்பர்கள் நாங்களா, நீங்களா? என காங்கிரஸ் கட்சியை நோக்கி முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
தொகுதி மறுவரையறை மற்றும் கூட்டணி விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்தார். மற்றவர்களைப் பார்த்து 'எட்டப்பன்' என்று விமர்சிப்பது எந்த விதத்தில் நியாயம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
கூட்டணியில் இருந்து விலகிய மற்ற கட்சிகள் தங்களது முடிவை வெளிப்படையாக அறிவித்துவிட்டு சென்றதாகக் குறிப்பிட்ட ரகுபதி, எதுவும் சொல்லாமல் கொள்ளாமல் ஒரே இரவில் கூட்டணியில் இருந்து விலகியவர்கள் எட்டப்பர்களா அல்லது தாங்களா என ஆவேசமாகக் கேட்டார்.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தாங்கள் எப்போதும் நியாயமான நிலைப்பாட்டையே எடுத்துள்ளதாகவும், தமிழகத்தின் உரிமை மற்றும் நலனுக்கு எதிரான எந்தவொரு சமரசத்திற்கும் இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தொகுதி மறுவரையறை இந்தியாவில் நடைமுறைக்கு வந்தே ஆக வேண்டும் என்றும், தற்போதுள்ள தொகுதிகளை எத்தனை ஆண்டுகள்தான் தொடர்ந்து வைத்திருக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். இந்தியாவில் இருக்கக் கூடிய உள்ள அனைத்து மக்களின் உரிமைகளையும் நலனையும் பாதுகாக்கும் இயக்கமாக தி.மு.க. செயல்படும் என்றும் ரகுபதி கூறியுள்ளார்.