திருப்புவனம் அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா குறித்து வெளியான பரபரப்பு தகவல்கள்

அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கூறிய பேராசிரியை நிகிதா மீது பணமோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தது குறித்த முதல் தகவல் அறிக்கைகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மதுரை,
திருப்புவனம் இளைஞர் அஜீத்குமார் போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மூல காரணமாக இருந்தது மதுரை திருமங்கலத்தை சேர்ந்த நிகிதா. இவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் தற்போது எழுந்த வண்ணம் உள்ளன. அதாவது, நிகிதா போலீசில் தெரிவித்தது போல மருத்துவர் கிடையாது. பி.எச்.டி முடித்து அரசு கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக வேலை பார்த்ததாகவும் கூறப்படுகின்றது. இது குறித்த விவரம் வருமாறு:
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆலம்பட்டி பகுதியை சேர்ந்த ஜெயபெருமாள், அவரது மனைவி சிவகாமி அம்மாள், இவர்களது மகள் நிகிதா உள்ளிட்டோர் தங்களுக்கு முக்கிய பிரமுகரின் உதவியாளரை தெரியும் என்றும், அவர் மூலமாக அரசு வேலை வாங்கித் தருவதாக கடந்த 2010-ம் ஆண்டு கூறியுள்ளனர்.
இதனை நம்பி சிலர், அரசு வேலை ஆசையில் ரூ.16 லட்சம் வரை இவர்களிடம் ெகாடுத்ததாகவும், ஆனால், வேலை வாங்கி தராத நிலையில் பணத்தை திரும்ப கேட்டபோது சம்பந்தப்பட்டவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அப்போது திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சிவகாமி அம்மாள் மற்றும் அவரது மகள் நிகிதா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரித்துள்ளனர்.
இதேபோல் செக்கானூரணி அருகே தேங்கல்பட்டியை சேர்ந்தவருக்கும் சிவகாமி அம்மாள், நிகிதா உள்ளிட்டோர் அரசு கல்லூரியில் பேராசிரியர் பணி வாங்கி தருவதாக ரூ.25 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக அளித்த புகாரின்பேரில், பல ஆண்டுகளுக்கு முன்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் நிகிதா டாக்டர் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவர் மருத்துவம் படித்தவர் அல்ல. அவர் பி.எச்டி. முடித்தவர் என்கிறார்கள். அவர் திண்டுக்கல்லில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. திருமங்கலத்தில் அவரது வீடு தற்போது பூட்டிக்கிடக்கிறது. நிகிதாவும், தாயாரும் எங்கு சென்றார்கள்? என்பது தங்களுக்கு தெரியாது என அக்கம்பக்கத்தினர் கூறினர்