

சென்னை,
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வாடகைக் கேட்டதால், வடமாநிலத்தைச் சேர்ந்த கும்பலினால் கொடூரமாகத் தாக்கப்பட்டு கழுத்தை அறுத்தச் சம்பவம், தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியையும் கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கட்டுப்பாடின்றி அதிகரித்து வரும் வெளிமாநிலக் கும்பல்களின் நடமாட்டம், சட்டவிரோதச் செயல்கள், தொழிலாளர் பெயரில் உருவாகும் குற்றவியல் வலையமைப்புகள் குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டும், அரசு போதிய தீவிர நடவடிக்கை எடுக்காததன் விளைவாகவே, இத்தகையக் கொடூர சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
ஒரு மனிதனை கடத்தித் தாக்கி கழுத்தறுக்கும் அளவுக்கு வட மாநில கும்பல்களின் வன்முறை தலைதூக்கி நிற்பது, சட்ட ஒழுங்கு அமைப்புகளுக்கு நேரடியான சவாலாகும்.
தமிழகத்தில் வேலை தேடி வருபவர்கள் வாழலாம். ஆனால் தமிழர் மண்ணின் அமைதியைச் சீர்குலைக்கும் குற்றக் கும்பல்களுக்கு எந்த வகையிலும் இடமளிக்கக் கூடாது என்பதே தமிழக மக்களின் உணர்வு. இந்த உணர்வை அரசு இனியும் அலட்சியப்படுத்தக் கூடாது.
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருவோரின் முழுமையான அடையாளப் பதிவு கட்டாயமாக்கப்பட வேண்டும்.
தொழிற்சாலைகள், தங்கும் விடுதிகள் மற்றும் தொழிலாளர் முகாம்களில் காவல்துறை ஆய்வு தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
குற்றப் பின்னணி கொண்ட வடமாநில கும்பல்களைக் கண்டறிய தனிப்படை அமைக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்போர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒப்பந்தங்கள் மூலம் அழைத்து வரப்படும் வட மாநில கும்பக்களுக்கும் அவர்களினால் ஏற்படும் குற்றச் செயல்களுக்கும், ஒப்பந்ததாரர்களே முழுப் பொறுப்பு ஏற்கும் படி செய்ய வேண்டும்.
ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் இரவு நேர தொழிலாளர்களுக்கானப் பாதுகாப்பு அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
மாநிலங்களைக் கடந்து செயல்படும் குற்ற வலையமைப்புகளை ஒடுக்க, மத்திய மற்றும் மாநில உளவுத்துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாகக் கைது செய்து, விரைவு நீதிமன்றத்தின் மூலம் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
தமிழகத்தின் அமைதியையும் மக்களின் பாதுகாப்பையும் காக்க வேண்டியது அரசின் அடிப்படை பொறுப்பு. அதை நிறைவேற்றத் தவறினால், மக்களிடம் உருவாகும் அச்சத்திற்கும் கொந்தளிப்பிற்கும் ஆட்சியாளர்களே பொறுப்பேற்க வேண்டிய நிலை உருவாகும் எனவே தமிழ்நாடு முதல்-அமைச்சர் சட்டம் ஒழுங்கை காக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு அதனை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.