

சென்னை,
அரியலூர் மூன்று வயது பெண் குழந்தை நிவிஷ்னா மரணத்திற்கு காரணம் யார்? பெற்ற பிள்ளையை பறிகொடுத்து பெற்றோரை நீதிகேட்டுப் போராடவிடுவது ஏன்? எனவும் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
அரியலூர் மாவட்டம், சிலுப்பனூர் கிராமத்தில் காணாமல்போன மூன்று வயதுக் குழந்தை நிவிஷ்னா, குட்டையில் உயிரற்ற நிலையில் மீட்கப்பட்ட செய்தியும் நெஞ்சைப் பிளக்கிறது. குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உரிய விசாரணை கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது பெரும் வேதனையளிக்கிறது. அன்புமகள் நிவிஷ்னாவை இழந்து தவிக்கும் பெற்றோருக்கும் உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
உலகம் என்னவென்றே அறியாத பிஞ்சுக்குழந்தை உயிரிழந்திருக்கிறது. மகளைப் பறிகொடுத்த பெற்றோர், தங்கள் குழந்தைக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியக்கூடப் போராட வேண்டுமா? குழந்தையை இழந்த துயரத்தோடு, நீதிக்காக அலையும் துயரத்தையும் அந்தக் குடும்பம் சுமக்க வேண்டுமா?
குழந்தை காணாமல்போன இடத்திலிருந்து குட்டைக்குச் சென்றது எப்படி? அதற்கான தடயங்கள் கிடைத்துள்ளனவா? குழந்தையின் மரணத்தில் சந்தேகம் எழுப்பும் குடும்பத்தினரின் வாக்குமூலங்கள் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டனவா? அவர்கள் முன்வைக்கும் ஒவ்வொரு கேள்வியும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதா? பெற்றோரின் சந்தேகங்களைப் போக்க வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு இருக்கிறதா, இல்லையா? குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மேடைதோறும் பேசும் தவெக அரசு, இக்குடும்பத்திற்கு என்ன பதில் சொல்லப்போகிறது?
உடற்கூறாய்வு, தடயவியல் ஆய்வு, சம்பவ இடத்தின் சூழல், சாட்சியங்கள் ஆகிய அனைத்தையும் இணைத்து விசாரிக்க வேண்டும். குழந்தைக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல், இந்த வழக்கின் விசாரணை முடியாது!
எனவே, காவல்துறை மூலம் விரைவான விசாரணை நடத்தி ஆதாரங்களின் அடிப்படையில் குழந்தையின் மரணத்திற்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிந்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையைப் பெற்றுத்தர வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
குழந்தை நிவிஷ்னா குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்பு நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.