

சென்னை,
சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர் நந்தகுமார் பேசும்போது, அ.தி.மு.க. ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரி உடைந்ததற்கு, அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் கவனக்குறைவுதான் காரணம் என்று குறிப்பிட்டார். இதைத்தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-
எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி:- செம்பரம்பாக்கம் ஏரி உடையவில்லை. தவறான தகவலை சொல்லக்கூடாது. உபரிநீர் தான் வெளியேறியது. நேற்று (நேற்று முன்தினம்) கூட சில மணி நேரம் பெய்த மழையில் சென்னையில் மழை நீர் பெரிய அளவில் தேங்கியிருந்தது.
நந்தகுமார் (தி.மு.க.):- 2 மணி நேரம் பெய்த மழை சென்னையே தத்தளிக்கிறது என்று சொல்கிறார். உங்கள் ஆட்சியில் வடிகால்வாய்களை சரியாக தூர்வாரவில்லை. நீங்கள் தூர்வாரியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது.
எஸ்.பி.வேலுமணி (அ.தி. மு.க.):- அ.தி.மு.க. ஆட்சியில் ஆண்டுக்கு ஆண்டு கால்வாய்கள் தூர்வாரப்பட்டது. முன்பு 3 ஆயிரம் இடங்களில் சென்னையில் தண்ணீர் தேங்கும். இது 150 இடங்களாக குறைக்கப்பட்டது.
பாதிப்புக்கு காரணம் என்ன?
நந்தகுமார்:- உங்கள் கட்சி தலைவர்தான் சென்னையில் தண்ணீர் தேங்குகிறது என்று கூறினார். கால்வாய்களை தூர்வாரும் பணிகளை எங்கள் முதல்-அமைச்சர் செய்வார். எதிர்க்கட்சி தலைவர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர். உபரி நீரை வெளியேற்றினால் எப்படி சென்னை மூழ்கும், நீர் திறப்பு குறித்து அன்றைய முதல்-அமைச்சர் உடனடியாக முடிவு எடுக்காதது தான் காரணம்.
செல்வ பெருந்தகை (காங்கிரஸ்):- செம்பரம்பாக்கம் ஏரி எனது தொகுதிக்குள் வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் நிரம்பிய நிலையில், 4 நாட்களாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் காத்திருந்து, அன்றைய முதல்-அமைச்சரின் அனுமதியை பெற முடியாததால் உபரி நீரை ஒரே நேரத்தில் வெளியேற்றினார்கள். அந்த தாக்கம் தான் சென்னை மாநகரம் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டது. இது தான் உண்மை.
எடப்பாடி பழனிசாமி:- செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து குறிப்பிட்ட நீர் தான் வெளியேற்றப்பட்டது, மீதியெல்லாம் உபரி நீர் தான். செம்பரம்பாக்கம் ஏரிக்கு கீழே 100 ஏரிகள் இருக்கிறது. அதை மறந்து விட்டோம். அதில் இருந்து வெளியேறும் உபரி நீர், சென்னையை சுற்றி மழை பெய்து கொண்டு இருந்தது, அந்த நீர் என எல்லாம் சேர்ந்து தான் பாதிப்பை ஏற்படுத்தியது. செம்பரம்பாக்கம் ஏரி அல்ல.
அதிகாரிகள் திறக்கலாம்
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்:- 2015-ல் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது தொடர்பாக மத்திய தணிக்கை குழு அறிக்கையில் சில தகவல்கள் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கை வந்த பிறகு சரியான நேரத்தில் அவையில் வைக்கப்படவில்லை.
பேரிடர் மேலாண்மை குழு 2015-ம் ஆண்டுக்கு முன் 3 ஆண்டுகளாக ஒரு முறை கூட கூட்டப்படவில்லை. இதனால் அவர்கள் விதிமுறைகளை தயார் செய்யவில்லை என்று தணிக்கை அறிக்கை கூறுகிறது. மேலும் ஏரி திறப்பு குறித்து சரியான நேரத்தில் திட்டமிடப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
தண்ணீரை எப்போது திறந்து விடுவது என்று முடிவு எடுப்பதற்கு அப்போது இருந்த முதல்-அமைச்சரிடம் தொடர்பு கொள்வதில் காலதாமதம் ஏற்பட்டது என்று அந்த அறிக்கையிலே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி:- மழைக்காலங்களில் ஏரிகளில் தண்ணீரை திறப்பதற்கு அதிகாரிகளுக்கு எந்த அனுமதியும் தேவையில்லை. அதிகாரிகள் அவர்களாகவே திறந்து கொள்ளலாம். அது தான் நடைமுறை. முதல்-அமைச்சரிடம் அனுமதி வராத காரணத்தினாலே தண்ணீரை திறப்பதில் தாமதம் ஆகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறுகிறார். அது இல்லை. மழைக்காலங்களில் நீர் நிரம்பும்போது உபரி நீர் வெளியேறுகிறது.
இவ்வாறு விவாதம் நடந்தது.