

சென்னை
தமிழக சட்டசபை தேர்தல், கடந்த ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டத்தில் நடத்தப்பட்டது. இதனை முன்னிட்டு தேர்தல் ஆணைய உத்தரவின்படி, பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. இதன்படி, தமிழகத்திற்கான பொறுப்பு டி.ஜி.பி.யாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டார்.
இந்த சூழலில், தேர்தல் முடிந்து த.வெ.க. தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்று உள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. பதவிக்காக ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் மகேஷ் குமார் அகர்வால் ஆகிய 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கான பட்டியல் யு.பி.எஸ்.சி.க்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் நடந்த கூட்டத்தில் இந்த 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யு.பி.எஸ்.சி. ஒப்புதல் அளித்துள்ளது என தகவல் வெளியானது. அவர்கள் 3 பேரில் ஒருவர் விரைவில் டி.ஜி.பி.யாக தேர்ந்தெடுக்கப்படுவார். இதனால், இன்னும் ஒரு சில நாட்களில் தமிழகத்திற்கான புதிய டி.ஜி.பி. நியமனம் இருக்கும் என தகவல் தெரிவிக்கின்றது.
தமிழக காவல் துறையில் நேற்று 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதுபற்றி தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநராக அருண் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சென்னை காவல் துறை ஆணையராக இருந்த அருணை, தேர்தல் ஆணையம் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருந்தது.
இதேபோன்று, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக டி.எஸ். அன்பு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். நிர்வாக ஏ.டி.ஜி.பி.யாக மகேஷ் குமார் தயாள் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இதில், தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக சந்தீப் ராய் ரத்தோர் பதவி வகித்து வருகிறார். அவருக்கு அடுத்தபடியாக உயரிய பதவியான சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக டி.எஸ். அன்பு நியமிக்கப்பட்டு உள்ளார்.