இந்தி பெயர்களை சேர்க்க உத்தரவிட்டது யார்? இதற்கான அரசாணை, துறைசார் சுற்றறிக்கை உள்ளதா? - சி.பி.ஐ. கேள்வி

இந்த பின்னணியில் மாநில நெடுஞ்சாலைகளில் இந்தி எழுத்துக்களை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது என்று சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
இந்தி பெயர்களை சேர்க்க உத்தரவிட்டது யார்? இதற்கான அரசாணை, துறைசார் சுற்றறிக்கை உள்ளதா? - சி.பி.ஐ. கேள்வி
Published on: 

சென்னை,

தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகளில் இந்தி மொழியில் ஊர் பெயர்கள் எழுதப்பட்டதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தி திணிப்பு

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் - நாசரேத் மாநில நெடுஞ்சாலையில் வழிகாட்டிப் பலகையில் இந்தி மொழியில் எழுதப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் இரு மொழிக்கொள்கைக்கு எதிரானது. தமிழ்நாடு அரசின் இந்தி திணிப்பை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

இதை வெறும் நிர்வாகத் தவறாக எடுத்துக்கொள்ள இயலாது. இது தமிழ்நாட்டின் மொழிக் கொள்கை, மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி கோட்பாட்டிற்கு எதிரான செயலாகும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 345ஆவது பிரிவு மாநிலத்தின் அலுவல் மொழியைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை மாநிலச் சட்டமன்றத்திற்கு வழங்குகிறது. தமிழ்நாடு அலுவல் மொழிச் சட்டம்-1956, தமிழ் மொழியை தமிழ்நாட்டின் அலுவல் மொழியாக அங்கீகரித்துள்ளது. ஒன்றிய அரசின் அலுவல் மொழிகள் (ஒன்றிய அரசின் அலுவல் பயன்பாட்டிற்கான) விதிகள் 1976, தமிழ்நாட்டிற்குப் பொருந்தாது.

சுற்றறிக்கை உள்ளதா?

தேசிய நெடுஞ்சாலைகளுக்கான ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்களை மாநில நெடுஞ்சாலைகளில் தானாகவே நடைமுறைப்படுத்த முடியாது. அவ்வாறிருக்க, அதை மாநில நெடுஞ்சாலையில் தவெக அரசு நடைமுறை படுத்துவதேன்?

மத்திய சாலை மற்றும் உள்கட்டமைப்பு நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டம் என்பதற்காக, மாநிலத்தின் மொழிக் கொள்கையைப் புறக்கணிக்க முடியுமா?

இந்திப் பெயர்களைச் சேர்க்க உத்தரவிட்டது யார்? இதற்கான அரசாணை அல்லது துறைசார் சுற்றறிக்கை உள்ளதா? உயர் அதிகாரிகளின் ஒப்புதல் பெறப்பட்டதா? இந்த விவரங்களைத் தமிழ்நாடு அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

முழுமையாக விசாரணை

இந்தி திணிப்பில், தொடர்புடைய இரண்டு அதிகாரிகளைத் தற்காலிக பணிநீக்கம் செய்து, இந்தி எழுத்துகளை அகற்றியிருப்பதாக அரசு அறிவித்துள்ளது. இது போதுமானதல்ல. இப்பிரச்சனைக்குத் தீர்வுமல்ல. இருமொழிக் கொள்கைக்கு எதிரான நடவடிக்கைகள் மீது விசாரணை நடத்தப்படுவது அவசியமானது. இதற்குப் பின்னால் உள்ள நிர்வாக முடிவுகள், அனுமதிகள் மற்றும் பொறுப்புகளை முழுமையாக விசாரித்து உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்.

மொழி என்பது வெறும் தொடர்புக்கான கருவி மட்டுமல்ல; அது மக்களின் வரலாறு, பண்பாடு, அடையாளம் மற்றும் உரிமையோடு இணைந்தது. இந்தியாவின் பன்மொழிப் பண்பாட்டை மதிப்பதற்குப் பதிலாக, இந்தி மொழியை மாநில மொழிகளின் மீது திணிக்கும் அணுகுமுறை தேசிய ஒருமைப்பாட்டுக்கும், கூட்டாட்சிக்கும் எதிரானதாகும். இது ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. முன்னெடுக்கும் இந்துத்துவ அரசியலின் பண்பாட்டுத் திணிப்பு மற்றும் மேலாதிக்கத்தை நிறுவும் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

மொழி மேலாதிக்கம் என்பது பண்பாட்டு மேலாதிக்கத்தின் ஒரு வடிவம். பண்பாட்டு மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராடிய மொழி உரிமைப் போராட்டத்தின் விளைவே தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை. இது தற்காலிக அரசியல் நிலைப்பாடு அல்ல. இந்தித் திணிப்புக்கு எதிரான நீண்ட நெடிய மக்கள் போராட்டத்தின் விளைவாகும். அதைச் சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியையும் அனுமதிக்க முடியாது. இந்தப் பின்னணியில் மாநில நெடுஞ்சாலைகளில் இந்தி எழுத்துக்களை சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது.

சமரசத்திற்கு இடமில்லை

சாத்தான்குளம் - நாசரேத் சாலைப் பலகை தொடர்பான நிர்வாக ஆணைகள், ஒப்புதல்கள் மற்றும் தொழில்நுட்ப விவரக்குறிப்புகளைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும். இதற்குப் பொறுப்பான அனைத்து நிலை அதிகாரிகளின் பங்கையும் விசாரித்து, உண்மையான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும்.

இந்தித் திணிப்பை எந்த வடிவத்திலும் ஏற்க முடியாது. தமிழ்நாட்டின் மொழி உரிமைகளையும், இருமொழிக் கொள்கையையும் பாதுகாப்பதில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை.

இரு மொழிக்கொள்கையில் உறுதியாக இருப்பதாக அறிவித்துள்ள த.வெ.க. அரசு, தனது கொள்கையை மீறுவது ஏன் என்ற கேள்விக்கு மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com