

சென்னை,
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், சென்னை பாலவாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். இவர், சட்டமன்ற தேர்தலையொட்டி சமூக வலைத்தளத்தில் தி.மு.க. வை ஆதரித்தும், விஜய்யின் த.வெ.க. கட்சியை கடுமையாக விமர்சித்தும் வந்தார். இந்த நிலையில் அவர், கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு நேற்று சாப்பிட சென்றார். அப்போது அவருடைய கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. த.வெ.க.வினர்தான் இந்த செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் பகிரப்பட்டன.
போலீசார் விசாரணையில், ‘ஜேம்ஸ் வசந்தன் தனது காரை அப்பகுதியில் உள்ள வீட்டின் முன்பு நிறுத்தி சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வீட்டின் உரிமையாளர் கார் கண்ணாடியை உடைத்திருப்பது தெரிய வந்தது. இந்த விவகாரத்தில் அரசியல் காரணம் இருக்கலாம் என்று கருதி ஜேம்ஸ் வசந்தன் புகார் அளித்திருந்தார். ஆனால் அரசியல் காரணம் இல்லை என்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அவர் கேட்டு கொண்டதாக தெரிகிறது.
எனவே கார் கண்ணாடியை உடைத்த வீட்டின் உரிமையாளரை போலீசார் எச்சரித்து அனுப்பி உள்ளனர். இதுதொடர்பாக ஜேம்ஸ் வசந்தன் வெளியிட்ட சமூக வலைத்தளப்பதிவில், எனது கார் கண்ணாடி உடைப்பு சம்பவத்தில் போலீசார் விசாரித்ததில் எந்த அரசியல் தொடர்பும் இல்லையென தெரிய வந்திருக்கிறது. கல்லெறிந்த நபர் எச்சரித்து அனுப்பி விடப்பட்டார்’ என்று கூறியுள்ளார்.