ஆட்சியை பிடிக்க நினைத்தது யார்? மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி

ஆள் பிடிக்கும் வேலை எங்களுக்கு இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஆட்சியை பிடிக்க நினைத்தது யார்? மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி
Published on

கோவை,

அதிமுக கட்சியில் இருந்து தவெகவில் அடுத்தடுத்து பலர் இணைந்து வருவது குறித்து அதிமுக தலைமை மட்டுமல்லாது திமுகவை சேர்ந்தவர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதிமுகவை தீர்ந்துபோன சக்தி என சொல்லிவிட்டு அந்த தீர்ந்துபோன சக்தியில் இருந்து ஆள் பிடிக்கும் வேலையில் தவெக செய்து வருவதாக திமுகவை சேர்ந்தவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று பேசுகையில் தவெகவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

தீர்ந்துபோன சக்தி

தீர்ந்துபோன சக்தி என சொல்லிவிட்டு அந்த கட்சியில் இருந்தே ஆட்களை வாங்கி வருகின்றனர். அப்படியென்றால் நீங்கள் அந்தளவுக்கு காய்ந்துபோன சக்தியாக இருக்கின்றீர்களா என விமர்சித்தார் ஸ்டாலின்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

யாரை தீர்ந்துபோன சக்தி என சொல்கின்றார் ? ஸ்டாலின் அதிகமாக பேசக்கூடாது. மக்களால் நிராகரிக்கப்பட்ட முதல்-அமைச்சர் அவர். அவர் இதுபோல கருத்து சொல்லி விமர்சனம் செய்வதை காட்டிலும் தன் கட்சியை எப்படி வளர்ப்பது என்பது குறித்து யோசித்து செயல்பட்டால் நல்லது.

பெரும்பான்மை பலம்

தமிழ்நாடு மக்கள் நம் முதல்-அமைச்சர் விஜய் தான் நாட்டை ஆளவேண்டும் என முடிவெடுத்து வாக்களித்து இருக்கின்றனர். ஆள் பிடிக்கின்ற நிலை எங்களுக்கு இல்லை. திமுக ஆட்சி நடைபெறும்போது பலர் அக்கட்சியில் சேர்ந்தார்கள். அதற்கு பெயர் என்ன ? மேலும் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு பெரும்பான்மை பலம் எங்களிடம் இருந்தபோது திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சியை பிடிக்க நினைத்தார்களே ? அதற்கு பெயர் என்ன ? அதனை முறியடித்தவர் முதல்-அமைச்சர் விஜய்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com