தமிழகத்தின் அடுத்த டி.ஜி.பி யார்? தேர்வு செய்யும் பணிகள் தொடக்கம்


தமிழகத்தின் அடுத்த டி.ஜி.பி யார்? தேர்வு செய்யும் பணிகள் தொடக்கம்
x

தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு பெற்ற பிறகு, யார் டிஜிபி ஆகலாம் என்று பல யூகங்கள் வெளியாகி உள்ளன.

சென்னை,

தமிழக டி.ஜி.பி.,யாக உள்ள சங்கர் ஜிவால், அடுத்த மாதம் 31ம் தேதி ஓய்வு பெற உள்ளார். இதனால், புதிய டி.ஜி.பி., யார் என்ற கேள்வி இருந்து வருகிறது. டி.ஜி.பி.,கள் நியமனம் தொடர்பாக புதிய வழிமுறைகளை சுப்ரீம் கோர்ட்டு வகுத்துள்ளது. உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப அதிகாரிகளின் தேர்வும் இருக்கும்.

புதிய விதியின்படி, நிலை-16 ஊதிய விகிதப்படி டி.ஜி.பி., அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் மட்டுமே தகுதியுடையவர்கள். முன்னதாக, 30 ஆண்டுகள் சேவையை முடித்த அனைத்து ஐ.பி.எஸ்., அதிகாரிகளும் பட்டியலில் சேர்க்க உரிமை பெற்றிருந்தனர். இப்போது அந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.

டி.ஜி.பி., பதவிக்கான அதிகாரிகளின் பட்டியலை தயார் செய்யும் பணியில் தமிழக அரசு மும்முரம் காட்டி வருகிறது. சீனியாரிட்டி அடிப்படையில் , டி.ஜி.பி.,கள் சீமா அகர்வால், ராஜீவ் குமார் மற்றும் சந்தீப் ராய் ரத்தோர் ஆகிய மூவரும் முதலிடத்தில் உள்ளனர். இந்த மூன்று அதிகாரிகளும் மத்திய அரசில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள்.

தகுதி வாய்ந்த அதிகாரிகளின் பட்டியல் இந்த வாரம் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என போலீஸ் உயர் அதிகாரிகள் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறவிருப்பதால், புதிய டி.ஜி.பி., நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது. சங்கர் ஜிவாலுக்கு பதவி நீட்டிப்பு கிடைக்குமா என்றும் பேச்சுக்கள் உள்ளதாக கசிந்த தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story