

சென்னை,
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில், திண்டிவனம், காட்டுமன்னார்கோவில் ஆகிய 2 தொகுதிகளில் மட்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றது. தற்போது த.வெ.க. ஆட்சி அமைவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை விஜய் கோரினார்.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுடன் திருமாவளவன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் பெரும்பாலான நிர்வாகிகள் விஜய்க்கு நிபந்தனையுடன் ஆதரவு கொடுக்கலாம் என்று குரல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வென்றுள்ளார். இதில் அவர் ஒரு தொகுதியில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவே வாய்ப்பு அதிகமாக உள்ளது. அவ்வாறு ராஜினாமா செய்யும் தொகுதியில் திருமாவளவன் போட்டியிட வேண்டும். பின்னர், துணை முதல்-அமைச்சர் பதவி மற்றும் ஒரு அமைச்சர் பதவி ஆகியவற்றை வழங்கிட நிபந்தனை விதிக்க வேண்டும்.
சிதம்பரம் தொகுதி எம்.பி.யாக திருமாவளவன் இருக்கிறார். அவர் சட்டமன்றத் தேர்தலில் போடியிட்டு வெற்றி பெறும்போது எம்.பி. பதவியை ராஜினாமா செய்வார். எனவே, வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் சிதம்பரம் தொகுதியை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வழங்கிட வேண்டும். த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்க இந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தவெக ஆதரவு கேட்ட நிலையில், விசிக ஆதரவு கடிதம் வழங்காததால் ஆட்சியமைப்பதில் சிக்கல் நிலவி வரும்நிலையில், உயர்நிலை குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இன்று விசிக தலைவர் திருமாவளவன் அறிவிக்கிறார். திருமாவளவன் என்ன முடிவெடுக்க போகிறார் என்பது தொடர்பாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.
இதற்கிடையே த.வெ.க.வுக்கு நிபந்தனையுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று (சனிக்கிழமை) ஆதரவு வழங்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. வன்னி அரசு நேற்று தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு. இது திருமா காலம்' எனப் பதிவிட்டிருந்தார்.
த.வெ.க.வுக்கு நிபந்தனை விதித்துள்ள நிலையில், விஜய்யை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் கடுமையாக விமர்சித்து பதிவு வெளியிட்டிருந்தார்.
அதில், தேர்தலுக்கு பிந்தைய அசாதாரண சூழலை கையாளுவதில் த.வெ.க. தலைவர் விஜய் தடுமாறிப்போய் இருக்கிறாரா அல்லது அவருடன் இருக்கும் இரண்டாம் கட்டத்தலைவர்கள் அவரை தவறாக வழி நடத்துகிறார்களா? என கேள்வி எழுகிறது. ஆட்சி அமைப்பதற்கான அறுதிப்பெரும்பான்மை தனக்கு கிடைக்காத சூழலில் மிக கவனமாக த.வெ.க. செயல்பட்டிருக்க வேண்டும். உடனே தான் ஆதரவு கோர விரும்பும் அரசியல் கட்சித்தலைவர்களை விஜய் நேரில் சந்தித்திருக்க வேண்டாமா?
இரண்டாம் கட்டத்தலைவர்களின் பிடியில் தான் இல்லை என்பதையும், கவர்னர் வழியாக பா.ஜனதா தமிழகத்திற்குள் நுழைய முயற்சிப்பதை தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் மனம்விட்டு கலந்துரையாடி இருக்க வேண்டாமா?
வாட்ஸ்-அப்பில் ஆதரவு கேட்டு கடிதத்தை அனுப்பிவிட்டு பதில் சொல்லுங்கள் என்பதை எப்படி புரிந்து கொள்வது? வெற்றிபெற்ற பின் தேர்தலுக்கு முந்தைய முரண்பாடுகளை கூர் தீட்டாமல், அனைத்து தலைவர்களின் நன்மதிப்பை பெரும் வகையில் தி.மு.க.வை ஒழித்துக்கட்டப்பட்ட மன்னராட்சி என பேசிவிட்டு தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைத்து வெற்றிகண்டுள்ள இடதுசாரிகள் மற்றும் வி.சி.க.விடம் கூசாமல் ஆதரவு கேட்டு அழைப்பதில் என்னவகை தர்க்க நியாயம் உள்ளது.? என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.