ஆட்சியை கைப்பற்றப்போவது யார்..? மக்கள் தீர்ப்பு என்ன?.. இன்று வாக்கு எண்ணிக்கை: ஏற்பாடுகள் தயார்

தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கையாக ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
ஆட்சியை கைப்பற்றப்போவது யார்..? மக்கள் தீர்ப்பு என்ன?.. இன்று வாக்கு எண்ணிக்கை: ஏற்பாடுகள் தயார்
Published on

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி நடந்து முடிந்தது. 234 தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள்..? மக்கள் தீர்ப்பு என்ன..? என்பது தொடர்பாக பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும்நிலையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

அ.தி.மு.க.- தி.மு.க. - நா.த.க. - த.வெ.க.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப்போட்டி நிலவியது. இந்த சூழலில், புதிதாக களம் கண்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிக அளவில் வாக்குகளை பிரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தேர்தல் முடிவுகளை துல்லியமாக கணிப்பதில் சவால்கள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தி.மு.க. மீண்டும் ஆட்சியை பிடித்து வரலாறு படைக்குமா?.. அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறுமா?.. விஜய் ஆட்சியைப் பிடிப்பாரா? அல்லது எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றத்திற்குள் நுழைவாரா? என்ற கேள்விகளுக்கு இன்று தெளிவான பதில்கள் கிடைத்துவிடும்.

இன்றைய தினம் வாக்கு எண்ணும் மையங்கள் மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் காலை முதல் பரபரப்பாக இருக்கும். இதையொட்டி தமிழக காவல்துறையின் சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் மட்டும் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் 40-க்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினர் துப்பாக்கி ஏந்தியபடி பணியில் உள்ளனர்.

இதற்கிடையில் இன்று தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் பிறப்பித்து உள்ளார். அனைத்து ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள், போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவு வெளியாகும்போது வாக்கு எண்ணும் மையத்தின் வெளிப்பகுதி மட்டுமல்லாமல் தமிழகத்தின் பிற இடங்களிலும், பிரச்சினைக்குரிய பகுதிகளிலும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

சென்னையை பொறுத்தவரை ராணிமேரி கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி என 3 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் மாநகர பகுதி முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

அரசியல் கட்சியின் அலுவலகங்கள் உள்பட முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட உள்ளனர். வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்ததைபோல வாக்கு எண்ணிக்கையையும் அமைதியாக நடத்தி முடித்திட அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் அதிகாரிகள், போலீசார் மேற்கொண்டு உள்ளனர்.

மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்

இதனிடையே வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 234 வாக்கு எண்ணும் அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதே வளாகங்களில், தபால் வாக்குகளை எண்ணுவதற்காக கூடுதலாக 240 அறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. பதிவான வாக்குகளை எண்ணும் பணிக்காக மொத்தம் 3 ஆயிரத்து 324 மேஜைகள் பயன்படுத்தப்படும்.

வாக்கு எண்ணும் பணிகள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்படும். வாக்கு எண்ணும் பணிக்காக மொத்தம் 10,545 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் வாக்கு எண்ணும் செயல்முறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை உறுதி செய்ய 4,624 நுண் பார்வையாளர்கள் துணையாக இருப்பார்கள்.

வாக்கு எண்ணும் நடவடிக்கைகளை மேற்பார்வையிடவும், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்கள் கண்டிப்பாக பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒருவர் என மொத்தம் 234 வாக்கு எண்ணும் பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தபால் வாக்குகளை எண்ணுவதற்கு, ஒவ்வொரு 500 வாக்குகளுக்கும் ஒரு வாக்கு எண்ணும் மேஜை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, 1,135 கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

வாக்கு எண்ணும் செயல்முறையின் நேர்மை மற்றும் சுமுகமான நடத்தையை உறுதி செய்வதற்காக அனைத்து மையங்களிலும் விரிவான மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் முறையாக, இந்திய தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதியற்ற நபர்கள் நுழைவதை தடுக்கும் நோக்கில் 'கி.யூ.ஆர். கோடு' அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதை ஸ்கேன் செய்து சரிபார்த்த பிறகு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கையுடன் தொடங்கும், அதைத்தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கும். அனைத்து சட்டமன்ற தொகுதிகளின் சுற்று வாரியான முடிவுகள், சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் அந்தந்த மையங்களில் உள்ள பொது ஒலிபெருக்கி அமைப்பு மூலம் அறிவிக்கப்படும். இந்த முடிவுகள் 'இ.சி.ஐ. நெட்' செயலியிலும் பிரதிபலிக்கும். மேலும், முடிவுகளை results.cci.gov.in என்ற இணையதளத்திலும் பார்க்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com