பஸ் நிறுத்த நிழற்குடைகள் ஏன் அகற்றப்படுகின்றன? மாநகராட்சி தலைமை பொறியாளர் தகவல்

சென்னை மாநகரில் மழை நீர் வடிகால் பணிகள் நிறைவடைந்ததும் அப்புறப்படுத்தப்பட்ட பஸ் நிறுத்தங்கள் மீண்டும் அமைக்கப்படும் என்று மாநகராட்சி தலைமை பொறியாளர் எஸ்.ராஜேந்திரன் கூறினார்.
பஸ் நிறுத்த நிழற்குடைகள் ஏன் அகற்றப்படுகின்றன? மாநகராட்சி தலைமை பொறியாளர் தகவல்
Published on

சென்னை,

சென்னை மாநகரில் இயக்கப்படும் மாநகர போக்குவரத்து கழக பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி பஸ் நிறுத்தங்களில் நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் ஒரு சில இடங்களில் நிழற்குடைகள் நவீன மயமாக்கப்பட்டு உள்ளன. சில இடங்களில் நிழற்குடைகளில் போதிய வசதி இல்லாமலும் உள்ளது. மேலும் சில பஸ் நிறுத்தங்களில் உள்ள நிழற்குடைகள் பஸ் நிறுத்தம் அருகில் கழற்றியும் வைக்கப்பட்டு உள்ளன.

இதுபோன்ற பஸ் நிறுத்தங்களில் நிற்கும் பயணிகள் வெயில், மழையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவற்றை உடனடியாக சீரமைப்பதுடன், நடைபாதை வியாபாரிகள், பிச்சை எடுப்பவர்களும் ஆக்கிரமித்திருப்பதால் அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கையும் விடுக்கப்பட்டு வந்தது. இதுதொடர்பாக 'தினத்தந்தி'யில் கட்டுரை ஒன்றும் வெளியானது.

இந்தநிலையில், மாநகராட்சி தலைமை பொறியாளர் (பொது) எஸ்.ராஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது:-

சென்னை அண்ணாசாலை தேனாம்பேட்டையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் உள்ள நிழற்குடை மழைநீர் வடிகால் பணியின் போது அகற்றப்பட்டது. தற்போது பணி முடிந்துள்ள நிலையில் மீண்டும் அது அந்த இடத்திலேயே நிறுவப்பட்டு பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

அதேபோல், மாநகராட்சி நெடுஞ்சாலைத்துறை, மெட்ரோ ரெயில் மற்றும் பிற சேவைத் துறையினரால் மேற்கொள்ளப்படும் மழை நீர் வடிகால்வாய் பணிகளால் பல்வேறு இடங்களில் 20-க்கும் மேற்பட்ட பஸ் நிழற்குடைகள் அகற்றப்பட்டன அவற்றில் பணிகள் முடிவுற்ற உடன் மீண்டும் அதே இடங்களில் பஸ் நிறுத்த நிழற்குடைகள் பொருத்தப்பட உள்ளன. தற்போது வேளச்சேரி, தேனாம்பேட்டை, நந்தனம் போன்ற இடங்களில் மீண்டும் பஸ் நிறுத்தங்கள் நிறுவப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com