கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவது ஏன்.? - உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

“உலகம் உங்கள் கையில்" திட்டத்தின் கீழ் 898 மாணவிகளுக்கு லேப்டாப்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை,
சென்னை அண்ணா சாலை காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில், கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்கான “உலகம் உங்கள் கையில்" திட்டத்தின் கீழ் 898 மாணவிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் லேப்டாப்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது;
”உங்களையெல்லாம் சந்தித்து, இன்றைக்கு இந்த மடிக்கணினியை வழங்குவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். காயிதே மில்லத் கல்லூரி மாணவிகள் உங்களிடம் மிகவும் பிடித்த விசயம் என்னவென்றால், உங்களுடைய சமூக அக்கறை. கல்லூரிக்கு வந்தோம், படித்தோம், டிகிரி வாங்கினோம், வீட்டுக்கு சென்றோம், வேலைக்கு சேர்ந்தோம் என்றில்லாமல் சமூக நலன் சார்ந்த பல்வேறு விசயங்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கக்கூடியவர்கள்தான் இந்த காயிதே மில்லத் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் நீங்கள்.
லேப்டாப் திட்டத்தை பற்றி உங்களுக்கே தெரிந்திருக்கும். இதை முன்பு, சென்ற ஆட்சியாளர்கள் பள்ளிக்கூடம் படிக்கின்ற குழந்தைகளுக்கு கொடுத்து கொண்டிருந்தார்கள். அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு இந்த திட்டத்தை நிறுத்திவிட்டார்கள். மீண்டும் இந்த திட்டத்தை தொடங்க வேண்டும் என்று எல்லோரும் சொல்லும் போது, பள்ளி மாணவர்களுக்கு கொடுப்பதைவிட கல்லூரி மாணவர்களுக்கு கொடுக்கும்போது அவர்களுக்கு படிப்பிற்கும் இது உதவியாக இருக்கும். அவர்கள் எங்கு வேலைக்கு சென்றாலும் உயர்கல்விக்கு உதவியாக இருக்கும் என்று நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் சொன்னார். அவர்களுக்கு பெரிய நிறுவனங்களில் வேலை கிடைப்பதற்கும் உதவியாக இருக்கும் என்று இந்த திட்டத்தை நம்முடைய முதலமைச்சர் தொடங்கி வைத்தார்கள்.
இந்த கல்விக்கான நிதியை நம்முடைய திராவிட மாடல் அரசு வெறும் செலவாக பார்க்கவில்லை. நம்முடைய தமிழ்நாடு மாணவர்களுடைய வளர்ச்சிக்கான முதலீடாகதான் நம்முடைய அரசு பார்க்கின்றது. பெண்களுடைய கைகளில் இருக்கக்கூடிய சமையில் கரண்டியை பிடுங்கி, அவர்கள் கையில் புத்தகத்தை கொடுக்க வேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னார்.
நம்முடைய முதலமைச்சர், புத்தகத்தை மட்டுமல்ல, இன்றைக்கு லேப்டாப்களையும் சேர்த்து உங்கள் கைகளில் ஒப்படைத்துள்ளார். ஏனென்றால், பெண்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தவர் நம்முடைய முதலமைச்சர். பெண்களுடைய கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும் என்றுதான் முதலமைச்சர், புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைத்தார். அந்த திட்டத்தை பற்றி உங்களுக்கு தெரியும். அரசு பள்ளியில் படித்து, கல்லூரியில் படிப்பதற்கு, எந்த கல்லூரியாக, அது தனியார் கல்லூரியாக இருந்தாலும் சரி பெண்கள் படிக்க வேண்டும் என்று அவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் கல்வி ஊக்கத் தொகை நான் தருகிறேன் என்று இன்றைக்கு புதுமைப் பெண் திட்டத்தை நம்முடைய அரசு செயல்படுத்தி வருகிறது.
பெரிய, பெரிய நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு நிச்சயம் இந்த லேப்டாப் உங்களுக்கு உதவியாக இருக்கும். லேப்டாப்பை யுடியூப் பார்ப்பதற்கு, படம் பார்ப்பதற்கு மட்டும் உபயோகப்படுத்தாமல், தயவு செய்து இந்த லேப்டாப்பை உங்களுடைய கல்விக்கு ஆக்கபூர்வமாக பயன்படுத்துங்கள் என்று இந்த நேரத்தில் ஒரு அன்பான கோரிக்கையை வைத்துக் கொள்கிறேன். உங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்காக இதை பயன்படுத்துங்கள். எதை கொடுத்தாலும் அதை பாதுகாத்து பன்மடங்கு ஆக்கக்கூடிய ஆற்றல் பெண்கள் ஆகிய உங்களுக்கு உண்டு. அந் தவகையில் இன்றைக்கு உங்கள் கைகளில் கொடுக்கப்படுகின்ற இந்த லேப்டாப் எதிர்காலத்தில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வளர்ச்சியாக பெருகும் என்று நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்.”
இவ்வாறு அவர் பேசினார்.






