அரசாணையை மீறி அரசு உதவிபெறும் பள்ளிகளில் சிறப்பு கட்டணம் வசூலிப்பது ஏன்? - மதுரை ஐகோர்ட்டு கேள்வி

எதன் அடிப்படையில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சிறப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மதுரை ஐகோர்ட்டு
கோப்புப்படம்
Published on

மதுரை,

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த மைக்கேல் தங்கராஜ் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களிடம் இருந்து சிறப்பு கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்து கடந்த 2008-ம் ஆண்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் அந்த அரசாணையை மீறி பல பள்ளிகளில் மாணவர்களிடம் இருந்து எந்தவித கட்டுப்பாடும் இன்றி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக ராமநாதபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாணவர்களின் பெற்றோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மேற்கண்ட அரசாணைக்கு எதிராக கட்டணம் வசூலிக்கிறார்களா என்பது பற்றி விசாரணை நடத்தவும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசாணைக்கு எதிராக கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வழிகாட்டுதல்களை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட பள்ளிகள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், இதுசம்பந்தமாக பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெற்றோரே கோர்ட்டினை அணுகலாம். இதுகுறித்து ஏற்கனவே கோர்ட்டும் உத்தரவு பிறப்பித்து உள்ளது என தெரிவித்தனர்.

அதற்கு நீதிபதிகள், கல்விக்கட்டணம் வசூலிப்பது தொடர்பாக அரசாணை வெளியிட்டும், அதனை மீறி எதன் அடிப்படையில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சிறப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது? என கேள்வி எழுப்பினர். பின்னர் இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர், இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com