அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாதது ஏன்? - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்


அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாதது ஏன்? - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
x

இதுதொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த சீராய்வு மனு நிலுவையில் உள்ளது.

சென்னை,

அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதற்கு பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

அரசு பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களில் 1,036 பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நீதிமன்ற வழக்குகளின் காரணமாக நிரப்ப இயலாத நிலை உள்ளது. அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஊட்டுப் பதவியாக பட்டதாரி ஆசிரியர் பதவி மட்டும் உள்ளது.

இதனால் இந்த பதவி உயர்வுக்கான முன்னுரிமைப் பட்டியலில் பட்டதாரி ஆசிரியர் பணியில் இருந்து முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களை சேர்க்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மறுபுறம் 2016-ம் ஆண்டுக்கு பின்னர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசியராக பதவி உயர்வில் சென்ற 1,187 முதுநிலை ஆசிரியர்களை மீண்டும் தரம் இறக்காமல் பணியில் தொடரக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரி 4-ந்தேதி வரவுள்ளது. மேலும், ஆசிரியர் பணிக்கும், பதவி உயர்வுக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) கட்டாயம் என்று சுப்ரீம்கோர்ட்டு கடந்த செப்டம்பரில் தீர்ப்பு வழங்கியது. இதுதொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த சீராய்வு மனு நிலுவையில் உள்ளது.

தமிழகத்தில் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story