உதவி பேராசிரியர்கள் தேர்வில் சிலரது மதிப்பெண்களில் மட்டும் வண்ண அடையாளம் ஏன்? - அன்புமணி கேள்வி

அடுத்தடுத்து எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும்.
அன்புமணி
Published on

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 2708 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட போட்டித் தேர்வின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் குளறுபடிகளும், முறைகேடுகளும் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கே இன்னும் விளக்கம் அளிக்கப்படாத நிலையில், சில தேர்வர்களின் மதிப்பெண்களில் வண்ண அடையாளங்கள் இடம்பெற்றிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல்லாயிரக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் தொடர்பான விஷயத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் பொறுப்பின்றி நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது.

வண்ண குறியீடுகள்

ஆங்கிலப் பாட உதவி பேராசிரியர் பணிக்கு நடத்தப்பட்ட தேர்வுகளுக்கான மதிப்பெண் பட்டியலில், சில இடங்களில் நீலம், சில இடங்களில் மஞ்சள் வண்ணங்களில் குறியீடுகள் இடம் பெற்றுள்ளன. அவர்களுக்கு சாதகமாகவோ, பாதகமாகவோ மதிப்பெண்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கலாம் என்று தேர்வர்கள் சார்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தேர்வர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஐயங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் போக்க வேண்டும்.

இதே பணிக்கான போட்டித் தேர்வு விடைத்தாள் மதிப்பீடுகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளை பாட்டாளி மக்கள் கட்சி தான் முதலில் அம்பலப்படுத்தியது. உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வுகளில் முதல் தாளில் அதுவும் விருப்பப்பாடத்தில் 111 மதிப்பெண் எடுத்த ஒருவர், இரண்டாம் தாளில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுப்பதும், முதல் தாளில் 54, அதாவது 36 சதவீதம் மதிப்பெண் எடுத்த ஒருவருக்கு, இரண்டாம் தாளில் 49, அதாவது 98 சதவீதம் மதிப்பெண் பெறுவதும் சாத்தியமற்ற ஒன்றாகும்.

ஆசிரியர் தேர்வு வாரியம்

உதவி பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழுவது ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அழகல்ல. ஆயிரக்கணக்கிலும், லட்சக்கணக்கிலும் தேர்வர்கள் பங்கேற்கும் தேர்வுகளை நடத்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் அவற்றில் குளறுபடிகள், முறைகேடுகள் நடக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியம் ஐயங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.

விசாரணை

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக்குகளுக்கு விரிவிரையாளர்களை தேர்வு செய்வதில் 2017-ஆம் ஆண்டில் நடந்த முறைகேடுகளையும், அது தொடர்பாக இப்போதும் விசாரணை நடத்தப்பட்டு வருவதையும் தமிழ்நாட்டு மக்கள் இன்னும் மறக்கவில்லை. தவறான காரணங்களுக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் அதன் மீதான நன்னம்பிக்கையையும், நன் மதிப்பையும் இழந்து வருகிறது. உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக அடுத்தடுத்து எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும். ஏதேனும் முறைகேடுகள் நடந்திருந்தால் அதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

X

Daily Thanthi
www.dailythanthi.com