

சென்னை,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் திடீரென மின் தடை ஏற்படுவது அதிகரித்துள்ளது. இரவில் மக்கள் மின் தடையால் தூங்க முடியாமல் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிடுவது தொடர்கதையாகி வருகிறது.
பகலெல்லாம் சுட்டெரிக்கும் வெயில் ஒரு பக்கம் இரவில் வீட்டிற்கு வந்தால் மின் வெட்டு என்ற நிலை சென்னை மற்றும் புறநகர் மக்களை குமுற வைத்துள்ளது.
பகலெல்லாம் சுட்டெரிக்கும் வெயிலில் ஓடி ஓடி உழைத்துவிட்டு, "அப்பாடா... இனிமேலாவது நிம்மதியாகத் தூங்கலாம்" என்று படுக்கையில் சாய்ந்தால், அடுத்த பத்தாவது நிமிடம் "திடீரென பவர் கட்" என்று மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. கம்ப்யூட்டர் முன்னால் கண்கள் வலிக்க வேலை செய்த ஐடி இளைஞர்கள், இளம்பெண்கள், பகல் முழுக்க சமையலறையில் வெந்து தணிந்த தாய் மற்றும் குடும்ப தலைவிகள், நாளைக்கு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் ஒரு மாணவ-மாணவிகள்... என எல்லாரும் கையில் ஒரு விசிறியோடு தெருவுக்கு வந்துவிடுகிறார்கள் இது ஏதோ ஒரு பகுதியில் நடக்கும் கதையல்ல; தினம் தினம் சென்னையின் அவலக்குரலாக மாறியிருக்கிறது.
இந்தநிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் மின்வெட்டு நிலவுதால் பொதுமக்கள் கடும் அவதுப்பட்டு வருகின்றனர்.
வீடுகளில் ஏசி பயன்பாடு அதிகமாகி வருவதால், அதிக சுமை காரணமாக துணை மின்நிலையங்களில் உள்ள மின் மாற்றிகள் பாதிப்பு அடைவதால் மின் தடை ஏற்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
மின்தடையை சமாளிக்க, மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை துணை மின்நிலையங்களில் இப்போது பொறியாளர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு கட்டாய பணி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள விளக்கம் வருமாறு:-
தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவது உண்மை தான். இது சம்பந்தமாக புகார் வந்தவுடன் உடனடியாக அங்கு சென்று ஊழியர்கள் சரி செய்து வருகின்றனர்.
சென்னையில் புறநகர் பகுதிகளான மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம் பகுதிகளில் மின்மாற்றி பழுது காரணமாக நேற்று நள்ளிரவு மின்தடை ஏற்பட்டது.
மேலும் அரும்பாக்கத்தில் மின்சார கேபிள் பழுது காரணமாக மின்தடை ஏற்பட்டது. இதே போல புதுப்பேட்டையிலும் மின்மாற்றி பழுது காரணமாக மின் துண்டிப்பு ஏற்பட்டது. இந்த தகவல் தெரிய வந்ததும் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
மின்தடை தொடர்பாக பொதுமக்கள் "மின்னகம்" மையத்திற்கு தெரிவிக்கும் புகார்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் பாதிப்பை சரி செய்து வருகிறோம். இது சம்பந்தமாக துறை அலுவலர்களுக்கு உத்தரவுகள் வழங்கப்படுகிறது.
பொதுமக்களின் புகார்களை பெறுவதற்காக மொத்தம் 95 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
மின்மாற்றி பழுது காரணமாக ஏற்படும் இழப்புகளை சரி செய்யவும் தேவைப்படும் இடங்களில் புதிய மின்மாற்றிகள் அமைக்கவும், துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு மின் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.