

சென்னை
த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் எதற்காக கத்துகிறார்கள்? என்றே தெரியவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தமிழக சட்டசபை இன்று காலை கூடியபோது, முதல்-அமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அப்போது அவர், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்று கூறினார்.
இதேபோன்று, மருத்துவ காப்பீடு தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்வு, பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகளையும் முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டார்.
அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு
இந்நிலையில் அ.தி.மு.க.வினர், கவன ஈர்ப்பு கோரி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதன்பின்னர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவைக்கு வெளியே நிருபர்களிடம் அளித்த பேட்டியின்போது, சவுதி அரேபியாவில், மயிலாடுதுறையை சேர்ந்த தமிழக மீனவர் ஒருவர் ஈரான் தாக்குதலில் உயிரிழந்த விவகாரம் குறித்து பேச அவையில் அனுமதிக்கவில்லை. உலகின் எந்த பகுதியில் தமிழன் பாதிக்கப்பட்டாலும் அவருக்காக குரல் கொடுப்பதே நமது வழக்கம்.
தமிழருக்கு பாதிப்பு என்றால் உடனே கவன ஈர்ப்பு எடுக்க வேண்டும். கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்து 5 நாள்களாகியும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதுவே அ.தி.மு.க., தி.மு.க. அரசாக இருந்தால் கவன ஈர்ப்பு எடுத்திருப்போம்.
ரீல்ஸ் அரசாங்கம்
உண்மையான தமிழ் உணர்வு த.வெ.க. அரசிடம் இல்லை. தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இவர்கள் எப்படி தமிழ்நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவார்கள்? என்று பழனிசாமி கேள்வி எழுப்பினார். ஒரு வாரம் ஆகியும் சவுதி அரேபியாவில் இருந்து சீர்காழி மீனவர் உடலை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை இல்லை. தமிழர்களை காப்போம் என பேச மட்டுமே செய்கின்றனர்.
அரசிடம், தமிழ் உணர்வு இல்லை. அங்கே மீனவர் இறந்து கிடக்கிறார். த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் கைதட்டி சிரித்து கொண்டிருக்கின்றனர். த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் எதற்காக கத்துகிறார்கள்? என்றே தெரியவில்லை. ரீல்ஸ் அரசாங்கம் நடந்து வருகிறது. மீனவர் விவகாரத்தை விட வேறு என்ன முக்கிய விஷயம் இருந்து விடப்போகிறது? ரீல்ஸ் வெளியிட்டு ரீல் விடுவதே நடக்கிறது என்றும் குற்றச்சாட்டாக கூறினார்.