

கோவை,
கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ், அரசு அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக அவரே பகிர்ந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் இன்று வைரலாகியிருக்கிறது. அவர் பொதுச் சுகாதாரத் துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடினேன் என மூன்று புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். ஆனால், அந்த புகைப்படத்தைப் பார்த்தவர்கள் பல விஷயங்களை அலசத் தொடங்கிவிட்டார்கள். முதலில், அரசு அதிகாரிகளை வரவழைத்து எம்எல்ஏ ஆலோசனை நடத்தியது ஏன்? என்பதே பலரது கேள்வி.
அடுத்து, மிகப்பெரிய சோபாவில் எம்எல்ஏ கனிமொழி அமர்ந்திருக்க, அவருக்கு எதிரே அரசு அதிகாரிகள் பிளாஸ்டிக் நாற்காலியில் போதுமான வசதிகள் இன்றி அமர்ந்திருந்தது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்விகள் எழுப்பினர். இன்று காலை முதலே, கனிமொழி யார்? ஏன் இப்படி இவர் மட்டும் மிகப்பெரிய சோபாவில் அமர்ந்திருக்கிறார், என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழுந்தது அவரது காதுகளுக்கும் இது எட்டிவிட்டது. உடனடியாக ஒரு வீடியோ வெளியிட்டு அவரது நிலைமையை விளக்கியிருக்கிறார் கனிமொழி எம்எல்ஏ. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பது, நான் அதிகாரிகளை சந்தித்தது எனது வீடு அல்ல, எனது ஜோதிட அலுவலகம். பல ஆண்டுகளாக நான் ஜோதிடராக மக்களை சந்தித்து வந்த எனது பழைய ஜோதிட அலுவலகம்.
தற்போது, எனது புதிய எம்எல்ஏ அலுவலகத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அலுவலகத்தின் பெயிண்டிங் மற்றும் பிற பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. மக்கள் பயன்பாட்டிற்கு சிறப்பாகவும், அனைவரும் எளிதாக சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன்வைக்கக்கூடிய வகையிலும் அதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
அந்தப் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை, வழக்கம்போல நான் எனது பழைய ஜோதிட அலுவலகத்திலேயே மக்கள், அதிகாரிகள் மற்றும் என்னைச் சந்திக்க விரும்பும் அனைவரையும் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்து வருகிறேன்.
எனக்கு மக்கள் சேவையே முதன்மை. அலுவலகம் எந்த இடத்தில் இருந்தாலும், மக்களின் நலனுக்காக என் கதவுகள் என்றும் திறந்தே இருக்கும். புதிய எம்எல்ஏ அலுவலகம் முழுமையாக தயார் ஆனவுடன், மேலும் சிறப்பான சூழலில் அனைத்து மக்களையும் அங்கு சந்தித்து, உங்கள் தேவைகள் மற்றும் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க உறுதியாக உள்ளேன் என்று பதிவிட்டு, தன்னுடைய அலுவலகத்தையும் படம்பிடித்து வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார்.