தொகுதி மாறியும் நயினார் நாகேந்திரன் வெற்றி வாய்ப்பை இழந்தது எப்படி? - பரபரப்பு தகவல்

நெல்லை தொகுதியில் நீண்டகாலமாக போட்டியிட்டு வந்த நயினார் நாகேந்திரன் இம்முறை சாத்தூரில் போட்டியிட்டார்.
தொகுதி மாறியும் நயினார் நாகேந்திரன் வெற்றி வாய்ப்பை இழந்தது எப்படி? - பரபரப்பு தகவல்
Published on

சென்னை,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் பா.ஜனதா மாநில தலைவர் நயினார்நாகேந்திரன் போட்டியிட்டார். இவரை ஆதரித்து பா.ஜனதா தேசிய தலைவர்கள் பிரசாரம் செய்தனர். நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் நயினார் நாகேந்திரன் 5 ஆயிரத்து 989 வாக்குகள் குறைவாக பெற்று தி.மு.க. வேட்பாளர் கடற்கரை ராஜிடம் தோல்வியை தழுவினார்.

இதே தொகுதியில் போட்டியிட்ட தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் அஜித் 53 ஆயிரத்து 498 வாக்குகள் பெற்று இருந்தார். அதே வேளயில் சசிகலா கட்சி சார்பில் பல தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதில் தென்மாவட்டங்களில் சில தொகுதிகளில் வலுவானவர்கள் களம் இறக்கப்பட்டனர். இந்த இடங்களில் சசிகலா நேரடியாக பிரசாரம் செய்தார்.

சில இடங்களில் இந்த வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரசாரம் செய்தார். இந்த நிலையில் சாத்தூர் தொகுதியில் சசிகலா தரப்பில் நிறுத்தப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த இசக்கிராஜா 11 ஆயிரத்து 602 வாக்குகள் பெற்றார். இது அ.தி.மு.க. கூட்டணி பெற வேண்டிய வாக்குகள் எனவும், இதனால் நயினார் நாகேந்திரன் தோல்வி அடைய நேரிட்டதாகவும் கூறப்படுகிறது.

நெல்லை தொகுதியில் நீண்டகாலமாக போட்டியிட்டு வந்த நயினார் நாகேந்திரன், இம்முறை அங்குள்ள கள நிலவரத்தை ஆய்வு செய்து, சாத்தூருக்கு இடம் மாறிய நிலையில் சசிகலா கட்சி வேட்பாளரால் அவரது வெற்றி பறிபோனதாக அரசியல் பார்வையாளர்கள் கூறினர்.

இதைபோல சசிகலாவின் அஇபுதமமுக வேட்பாளர்கள் பிரித்த வாக்குகளால் முதுகுளத்தூர், உசிலம்பட்டி, தென்காசி ஆகிய 3 தொகுதிகளிலும் என்.டி.ஏ. கூட்டணி வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர். முதுகுளத்தூர் வேட்பாளர் 40,422 வாக்குகள், உசிலம்பட்டி வேட்பாளர் 16,620 வாக்குகள், தென்காசி வேட்பாளர் 7,71 வாக்குகளை பெற்றுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com