வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட இடத்தில் சிசிடிவி செயலிழந்தது ஏன்? மாவட்ட ஆட்சியர் விளக்கம்

ஊட்டி வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் திரையில் தெரியாததால் பரபரப்பு ஏற்பட்டது.
வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட இடத்தில் சிசிடிவி செயலிழந்தது ஏன்? மாவட்ட ஆட்சியர் விளக்கம்
Published on

ஊட்டி,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட ஊட்டி, குன்னூர், கூடலூர், அவினாசி, பவானிசாகர், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள ஸ்ட்ராங்க் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. அங்கு 180 கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிப்பு பணி நடைபெறுகிறது. மேலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை திடீரென கண்காணிப்பு கேமரா காட்சிகள் டி.வி. திரையில் தெரியவில்லை. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த முகவர்கள், உடனடியாக தொழில்நுட்ப பிரிவு அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.  அவர்கள் விரைந்து வந்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு வழக்கம்போல் கண்காணிப்பு கேமரா காட்சிகள் டி.வி.யில் தெரிய ஆரம்பித்தது.

இந்த நிலையில், வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட இடத்தில் சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது குறித்து நீலகிரி ஆட்சியர் அருணா கூறியதாவது;

அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் நேற்று மாலை 6.17 முதல் 6.43 வரை 20 நிமிடங்களுக்கு 173 கண்காணிப்பு கேமராக்களும் செயல் இழந்துவிட்டது. எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன. எந்த சந்தேகமும் தேவையில்லை. சந்தேகம் இருந்தால் கட்சியினரை அழைத்துச் சென்று காட்ட தயாராக இருக்கிறோம்.' இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com