செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை மீண்டும் ரெய்டு நடத்தியது ஏன்? வெளியான தகவல்

கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை மீண்டும் ரெய்டு நடத்தியது ஏன்? வெளியான தகவல்
Published on

சென்னை,

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் 15-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி நேற்று உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 19-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். கேரள பதிவெண் கொண்ட வாகனத்தில் வந்த 5 அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமைச்சர் செந்தில்பாலாஜி இல்லத்தில் தற்போது அவரது பெற்றோர் வசித்து வருகின்றனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதனிடையே, செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தியது ஏன்? என்பது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கை தேடி சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அசோக்கிற்கு எதிராக ஏற்கனவே லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ள நிலையில், அவர் இதுவரை விசாரணைக்கு ஆஜராகாமல் பல மாதங்களாக தலைமறைவாக உள்ளார். இதனால், அசோக்கின் இருப்பிடம் குறித்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வீட்டில் ஏற்கனவே பலமுறை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், மீண்டும் இன்று சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com