

சென்னை,
சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மே 17 முல்லை வாய்க்கால் நினைவேந்தல் இந்த துயரத்தை 3 நாட்கள் அனுசரித்து வருகிறார்கள். விசிக மே 18 சர்வதேச இனப்படுகொலை என அனுசரித்து அதை கடைப்பிடித்து வருகிறோம். ஜூன் 14 தேதி விசிக சார்பில் விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. ஜூலை 23 உலகத் தமிழர்களால் நினைவுகூரப்படும் ஒரு நாள் கருப்பு ஜூலை என போராளிகளுக்கு கடைபிடிக்கப்படுகிறது.
மகளிர் உரிமை திட்டம் தொடரும் என சொன்னது மகிழ்ச்சியானது. அதை வரவு வைக்க வேண்டிய நாள் சற்று தள்ளி போவது ஒரு புறம் இருந்தாலும், விரைவில் அனைவருக்கும் வரவு வைக்கப்படும் என சொல்வது வரவேற்கத்தக்கது.
இடது சாரிகள் எடுக்கும் முடிவை வைத்து எங்கள் கட்சியில் கூட்டம் நடத்தி அதன் பின்னர் முடிவு எடுப்போம் என சொன்னோம். அதன்படி தான் நாங்கள் கலந்தாய்வு செய்து முடிவெடுத்தோம். எங்கள் கட்சியின் கூட்டம் முடிந்து கட்சியினரிடமே நாளை மறுநாள் தான் அறிவிப்போம் என சொன்னேன். ஆனால் நான் ஊடகங்களுக்கு யாருக்கும் தெரிவிக்கவில்லை. திட்டமிட்டபடி நடந்த கட்சியின் ஆன்லைன் கூட்டத்தில் எடுத்த முடிவில் பல கருத்துகள் வந்தது.
அதன் பின்னர் என்னுடைய முடிவுக்கு கட்டுப்படுவோம் என கட்சி நிர்வாகிகள் சொன்னார்கள். அதன் பின்னர் தான் நாங்கள் அறிவித்தோம். ஆனால் எங்களை பிடிக்காத சிலர் நாங்கள் தலைமறைவாகி விட்டோம் எங்கோ சென்று விட்டோம் என அவதூறுகளை பேசினார்கள். முதல்-அமைச்சர் பதவிக்காக காத்திருக்கவில்லை. தன்னை முதல்-அமைச்சராக முயன்றது குறித்து தனக்கு தெரியாது. நண்பர்கள் மூலமாக தான் தன்னை முதல்-அமைச்சராக்கும் முயற்சி குறித்து தெரியவந்தது. முதல்-அமைச்சர் பதவிக்காக தான் தவெகவிற்கு ஆதரவளிப்பதற்கு தாமதம் செய்ததாக அவதூறு பரப்புகிறார்கள்.
ஏற்கனவே ஆர்டர் செய்த சோபா தான் அலுவலகத்திற்கு வந்தது. விசிக அலுவலகத்திற்கு சோபா வந்ததை குறிப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறவில்லை. அதிமுகவில் உருவாகியிருக்க ஒரு அணியின் தலைவரை, சட்டமன்ற உறுப்பினர்களை சந்திக்க முதல்-அமைச்சர் சென்றதை உதயநிதி சுட்டிக்காட்டியிருக்கிறார் என்று கருதுகிறேன். இது தற்செயலாக நடந்தது. விஜய்யின் வருகைக்காக ஆர்டர் செய்யப்படவில்லை. தவறான தகவலை பரப்ப வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.