த.வெ.க.வுக்கு ஆதரவு கொடுத்தது ஏன்? - கம்யூனிஸ்ட் கட்சிகள் விளக்கம்

த.வெ.க.வுக்கு ஆதரவு கொடுக்க தி.மு.க.வின் ஒப்புதல் எங்களுக்கு தேவையில்லை என கம்யூனிஸ்ட் மாநில தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
த.வெ.க.வுக்கு ஆதரவு கொடுத்தது ஏன்? - கம்யூனிஸ்ட் கட்சிகள் விளக்கம்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதை சுட்டிக்காட்டி, த.வெ.க.வை ஆட்சியமைக்க தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகர் அழைப்பு விடுக்கவில்லை.

இதையடுத்து, பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில் த.வெ.க. ஈடுபட்டது. தங்களுக்கு ஆதரவு வழங்குமாறு தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்.) ஆகிய கட்சிகளுக்கு த.வெ.க. அழைப்பு விடுத்தது.

இது தொடர்பாக அந்தந்த கட்சிகள் சார்பில் தங்களது நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. தற்போது வரை இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் த.வெ.க. ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன. வி.சி.க. சார்பில் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தி முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், த.வெ.க.வுக்கு ஆதரவு கொடுத்தது ஏன்? என்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது;-

“நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தமிழக மக்கள் தனித்த பெரும்பான்மையை வழங்கியுள்ளனர். இதில் ஆட்சியமைப்பதற்கு அவர்களுக்கு சில இடங்கள் தேவைப்பட்டன. அவர்கள் வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம். உள்ளிட்ட கட்சிகளை அணுகி ஆதரவு கேட்டார்கள்.

இது குறித்து நாங்கள் எங்கள் கட்சிகளின் செயற்குழு, நிர்வாகக் குழு உறுப்பினர்களிடம் கலந்து பேசி, எங்கள் முடிவை அறிவித்துள்ளோம். இந்திய ஜனநாயகத்தில் இதுபோன்ற ஏற்ற இறக்கங்கள் வருவது இயல்பு. தமிழக மக்கள் ஜனநாயகத்தை முன்மொழிந்திருக்கிறார்கள், நாங்கள் வழிமொழிந்திருக்கிறோம்.

எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைய வேண்டியது அவசியம். த.வெ.க. நிர்வாகிகள் கடிதம் மூலமாகவும், எழுத்துப்பூர்வமாகவும் ஆதரவு கேட்டார்கள். அக்கட்சியின் நிர்வாகிகள் நேரடியாக வந்து எங்களிடம் பேசினார்கள்.

தற்போதைய நிலையில், 10-ந்தேதிக்குள் அரசு அமையவில்லை என்றால், தமிழகத்தில் கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே, தனிப்பெரும் கட்சி என்ற முறையில் த.வெ.க.வை ஆட்சியமைப்பதற்கு கவர்னர் அழைப்பு விடுத்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக 118 என்ற எண்ணிக்கையை கொடுத்தால்தான் ஆட்சி அமைக்க அழைப்பேன் என கவர்னர் சொல்லியிருப்பது சட்டத்திற்கு விரோதமானது, ஜனநாயகத்திற்கு விரோதமானது.

கவர்னர் ஆட்சி அமைந்தால், தமிழகத்தில் பா.ஜ.க. கொள்ளைப்புறம் வழியாக ஆட்சி நடத்துவது போன்றது. சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் முக்கியமான கடமை. அதில் பா.ஜ.க. முற்றிலும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு இடத்தில்தான் அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

தேர்தலில் தோல்வியடைந்தாலும் கவர்னர் மூலம் தமிழகத்தில் ஆட்சி நடத்துவதற்காகத்தான் பா.ஜ.க. இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. பா.ஜ.க.வின் இந்த நோக்கத்தை முறியடிக்க வேண்டும் என்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவளிப்பது என்று நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

அதே சமயம், அமைச்சரவையில் நாங்கள் பங்கேற்க மாட்டோம். வெளியில் இருந்து ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பது என்று 2 கட்சிகளும் முடிவு செய்துள்ளோம். இன்னொரு தேர்தலை தவிர்ப்பதற்காகவும், கவர்னர் ஆட்சி வருவதை தடுப்பதற்காகவும், இப்போது த.வெ.க.வுக்கு ஆதரவு என்பதைத் தவிர வேறு அரசியல் நிலைபாட்டை எடுக்க முடியாது என்பதை உணர்ந்து 2 கட்சிகளின் மாநில குழுவும் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

அதோடு, கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுக்கும் அரசியல் நிலைபாட்டை ஆதரிப்போம் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியால் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. எனவே ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பு இல்லை.

இப்போது ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பு இருக்கும் ஒரே கட்சி த.வெ.க. மட்டும்தான். கவர்னர் ஆட்சி வராமல் தடுப்பது, கொள்ளைப்புறம் வழியாக பா.ஜ.க. வருவதை தடுப்பது என்ற நோக்கத்தில்தான் இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்.

அதே நேரம் மதச்சார்பற்ற கொள்கைகளை முன்னெடுப்பது, மாநில உரிமைகள் பாதுகாப்பு, தமிழ்நாட்டின் வளர்ச்சி, தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக தி.மு.க. நிறைவேற்றிய மக்கள் நலத்திட்டங்கள் இவையெல்லாம் ஏற்கனவே நாங்களும், தி.மு.க.வும் சேர்ந்துதான் நிறைவேற்றியிருக்கிறோம். அந்த வகையில், இனிவரும் காலத்திலும் மதவெறி சக்திகளுக்கு எதிராக, மத்திய பா.ஜ.க. அரசு மாநில உரிமைகளை பறிக்கும்போது தி.மு.க.வுடன் இணைந்து மாநில உரிமைகளை பாதுகாப்பது, மதவெறி நடவடிக்கைகளுக்கு எதிராக போராடவும், தி.மு.க.வுடான எங்களது உறவு தொடரும்.

த.வெ.க. ஆட்சி அமைப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்திருக்கிறோம். ஆட்சியமைப்பதைப் பொறுத்தவரை, அமைச்சரவையில் பங்கேற்க மாட்டோம், வெளியில் இருந்து ஆதரவளிப்போம். அதே சமயம், மாநில நலன் சார்ந்த, ஒத்த கருத்துடைய பிரச்சினைகளில் தி.மு.க.வுடன் சேர்ந்து நாங்கள் பயணிப்போம்.

த.வெ.க.வுக்கு நாங்கள் கூட்டணி அமைக்கவில்லை, ஆதரவு தெரிவித்துள்ளோம். இதுவே இப்போதைக்கு நாங்கள் எடுத்திருக்கும் அரசியல் முடிவு. உள்ளாட்சி மன்றத் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் பற்றியெல்லாம் இப்போதே பதில் கூற முடியாது.

விஜய் ஆட்சி அமைக்கக் கூடாது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எங்கும் சொல்லவில்லை. விஜ ஆட்சி அமைக்கட்டும், நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்து சிறப்பாக செயல்படுவோம் என்றுதான் மு.க.ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். மேலும், தி.மு.க.வின் ஒப்புதல் எங்களுக்கு தேவையில்லை. நாங்கள் சுதந்திரமாக எங்கள் அரசியல் நிலைப்பாட்டை எடுத்திருக்கிறோம். இப்போது அமையும் அரசு மக்கள் நல அரசாக இருக்க வேண்டும். இதுவே கம்யூனிஸ்ட்டுகளின் நிலைப்பாடு.

த.வெ.க.வுக்கு அதிக இடங்கள் கிடைக்கும்படி மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அவர்களால்தான் அரசமைக்க முடியும். இது மக்கள் அளித்த தீர்ப்பு. அந்த தீர்ப்பு இடதுசாரிகளால், விடுதலைச் சிறுத்தைகளால் தடைப்பட்டுவிட்டது என்று யாரும் சொல்லிவிடக் கூடாது. எனவே, மக்கள் அளித்த தீர்ப்புக்கு மதிப்பளித்து அரசியல் முன்மொழிவு செய்கிறோம். அதே சமயம், தி.மு.க. அரசு கொண்டு வந்த நலத்திட்டங்கள் தொடர வேண்டும் என்பதை நங்கள் வலியுறுத்துவோம்.”

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com