தி.மு.க.வில் இணைந்தது ஏன்..? - அ.ம.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மாணிக்கராஜா விளக்கம்


தினத்தந்தி 23 Jan 2026 10:09 AM IST (Updated: 23 Jan 2026 12:04 PM IST)
t-max-icont-min-icon

அ.ம.மு.க. துணைப்பொதுச்செயலாளர் மாணிக்கராஜா, கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக டி.டி.வி. தினகரன் அறிவித்திருந்தார்.

சென்னை,

அ.ம.மு.க. துணைப்பொதுச்செயலாளர் மாணிக்க ராஜாவை, கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் தலைவர் டி.டி.வி. தினகரன் அறிவித்திருந்தார். இதுதொடர்பாக அமமுக தலைமை கழகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், “கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரனான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக துணைப் பொதுச்செயலாளர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பம் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அ.ம.மு.க. துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து மாணிக்க ராஜா நீக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். அவருடன் தென்மாவட்டங்களைச் சேர்ந்த சில மாவட்டச் செயலாளர்களும் தி.மு.க.வில் இணைந்தனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்க ராஜா, “தமிழகத்தில் நல்லாட்சி கொடுத்துக் கொண்டிருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வில் இணைந்துள்ளோம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எதற்காக தொடங்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

அப்படி இருக்கும்போது, 8 ஆண்டுகள் கஷ்டப்பட்டு வளர்த்த அ.ம.மு.க.வை மறுபடியும் பழைய நிலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தும் அ.ம.மு.க. தலைமை கேட்கவில்லை.

பலமுறை எடுத்துச் சொல்லியும் கேட்காமல் தினகரன் எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொண்டர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் விருப்பப்படி தி.மு.க.வில் இணைந்துள்ளோம். 3 மாவட்ட செயலாளர்கள் தற்போது வந்துள்ளார்கள். விரைவில் மற்றவர்கள் வருவார்கள். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்துக்கு அர்த்தமில்லாத தலைமையின் செயல்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறி உள்ளோம்” என்று கூறினார்.

1 More update

Next Story