வைகைச் செல்வனை சந்தித்தது ஏன்? - திருமாவளவன் விளக்கம்

தமிழகத்தில் மதவாத அரசியலுக்கு ஒருபோதும் இடமில்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை நேற்று முன்தினம் திருச்சியில் ஒரே ஓட்டலில் தங்கியிருந்தபோது சந்தித்து பேசினார். இருவரும் சுமார் அரை மணி நேரம் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அந்தக் கூட்டணியில் இந்த முறை அதிக தொகுதிகளை கேட்டுவருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க.வும் தங்கள் கூட்டணியில் மேலும் பலர் இணைவார்கள் என்று கூறிவருகிறது. இதற்கு மத்தியில், திருமாவளவன் - வைகைச் செல்வன் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தது.

காஞ்சிபுரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வைகைச் செல்வன், திருமாவளவனுடனான சந்திப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு,"அ.தி.மு.க. கூட்டணி நாளுக்கு நாள் வளர்ச்சி பெறும். பலர் வர உள்ளனர். தி.மு.க. கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது. போகப்போக என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என்று கூறினார்.

இந்த நிலையில் வைகைச் செல்வனுடனான சந்திப்பு குறித்து திருமாளவன் விளக்கம் அளித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், "நட்பின் அடிப்படையில்தான் அ.தி.மு.க.வின் வைகைச் செல்வனை சந்தித்தேன். நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகம் கிடைத்தது; பேசினேன் அவ்வளவுதான். வைகைச் செல்வனுடன் அரசியல் குறித்து பேசவில்லை" என்று கூறினார்.

மேலும் அவர், "தமிழகத்தில் மதவாத அரசியலுக்கு ஒருபோதும் இடமில்லை என்பது தான் வரலாறு. மதத்தின் பெயரால் பிரச்சினையை கிளப்ப சங்க பரிவாரங்கள் முயற்சிக்கின்றன. திருப்பரங்குன்றத்தில் இந்து - முஸ்லீம்கள் இடையே எந்த முரண்பாடும் இல்லை. மத்திய தொல்லியல் துறை தமிழர்களை அணுகும் முறை வன்மையாக கண்டிக்கத்தக்கது" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com