

சென்னை
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டன. இதில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
தமிழக வெற்றிக்கழகம் தேர்தலில் வெற்றி பெற்றாலும், ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளிடம் தனித்தனியே கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த சூழலில், காங்கிரஸ் நிர்வாகிகள் நேற்று விஜய்யை சந்தித்து, 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை விஜய்யிடம் வழங்கினர். இதனை தொடர்ந்து, த.வெ.க. தலைவர் விஜய் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகரை சந்தித்தார்.
தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசு வழங்கி கவர்னர் அர்லேகர் வாழ்த்தினார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை கவர்னரிடம் வழங்கிய விஜய், தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்காக உரிமை கோரினார்.
ஆட்சியமைக்க கவர்னர் அர்லேகர் அழைப்பு விடுத்த பிறகு, தமிழக முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்பார் என தகவல் தெரிவித்தது. எனினும், விஜய்யை ஆட்சியமைக்க வரும்படி கவர்னர் அழைக்கவில்லை. இதற்கான பரபரப்பு தகவல்கள் வெளிவந்துள்ளன.
பெரும்பான்மையை நிரூபிக்க குறைந்தது 118 எம்.எல்.ஏ.க்களை தன்வசம் வைத்திருக்க வேண்டும். த.வெ.க. 108 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவையும் சேர்த்து, த.வெ.க.வின் கைவசம் 113 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எனினும், திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் ராஜினாமா செய்வார். அப்போது த.வெ.க.வின் பலம் 112 ஆக இருக்கும்.
வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளின் தலா 2 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு விஜய்க்கு கிடைக்கும்போது, மொத்த எண்ணிக்கை 118 ஆக இருக்கும். எனினும், தற்காலிக சபாநாயகர் அறிவிக்கப்பட்ட பின்னர், அவரால் வாக்களிக்க முடியாது. இதனால், த.வெ.க.வின் பலம் 117 ஆக குறையும். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை ஏற்படும். மீதம் ஒரு எம்.எல்.ஏ.வின் ஆதரவு த.வெ.க.வுக்கு தேவையாக உள்ளது.
இதனால், அக்கட்சி ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. ஆட்சியமைக்க தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் வரும்படி கவர்னர் அறிவுறுத்தியுள்ளார் என கூறப்படுகிறது. அப்படி பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் விஜய் வராத சூழலில் அவரை ஆட்சியமைக்க வரும்படி கவர்னர் அழைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்று, கவர்னர் அர்லேகர் இன்று கேரளாவுக்கு பயணம் மேற்கொள்கிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்த சூழலில், தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது. அதற்கேற்ப த.வெ.க.வுக்கு ஆதரவு கிடையாது என்று அ.தி.மு.க. தெரிவித்து விட்டது. இதனை அடுத்து, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை புதுச்சேரியில் சொகுசு விடுதியில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.
இதனை தொடர்ந்து, அ.தி.மு.க.வுக்கு தேவையான ஆதரவை வெளியில் இருந்து தி.மு.க. அளிக்கும் என்றும் எதிர்க்கட்சியாக செயல்பட அக்கட்சி முடிவு செய்துள்ளது என்றும் தகவல் தெரிவிக்கின்றது. இதனால், தமிழக அரசியலில் பரபரப்பு நீடித்து வருகிறது.