

கடலூர்,
என்.எல்.சி. நிறுவனம், 2-வது சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக கரிவெட்டி, கத்தாழை, மும்முடிசோழகன், வளையமாதேவி உள்ளிட்ட பகுதியில் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் முதற்கட்ட பணியை மேற்கொண்டது. மேலும் என்.எல்.சி. சுரங்க நீரை வெளியேற்றுவதற்காக அங்குள்ள பரவனாறுக்கு பதிலாக புதிய பரவனாறு அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
என்.எல்.சி. சுரங்கங்களில் இருந்து பழைய பரவனாற்றில் வெளியேற்றப்படும் நீரை பயன்படுத்தி, விவசாயிகள் தங்களது விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தனர்.
இதனிடையே பரவனாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணி நடைபெறுவதை அறிந்த விவசாயிகள், பரவனாற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து தண்ணீரை தடுத்தால் பயிர்களுக்கு பாசனம் செய்ய முடியாது என்று கூறி அந்த பணியை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். அத்துடன் சுரங்க விரிவாக்க பணியை நிறுத்தவேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், பரவனாறு திசைதிருப்பம் ஏன் என்பது குறித்து என்.எல்.சி. நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக என்.எல்.சி. நிறுவனம் கூறுகையில்,
"அதிக பருவமழை காலங்களில், ஆற்றின் நீர்மட்டம் கூடும்போது, சுற்றியுள்ள வயல்களிலும், கிராமங்களிலும் வெள்ளத்தை ஏற்படுத்துகிறது.
அதனால் பரவனாற்றை திசைதிருப்ப வேண்டிய அவசியம் உள்ளது. பரவனாற்றின் நிரந்தர கால்வாய் அமைக்கப்பட்டால் ஆண்டுக்கு 2 முதல் 3 பயிர் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும்." இவ்வாறு என்.எல்.சி. நிறுவனம் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.