பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1,000 இடம்பெறாதது ஏன்? - அமைச்சர் விளக்கம்

2025-ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1,000 ரொக்கப்பணம் இடம்பெறவில்லை.
பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1,000 இடம்பெறாதது ஏன்? - அமைச்சர் விளக்கம்
Published on

சென்னை,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் ஜனவரி 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழர்களின் கலாசாரம், பாரம்பரியத்தை பறைச்சாற்றும் இந்த பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு திட்டம் கடந்த 2009-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.

தொடக்கத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரை கிலோ பச்சரிசி, வெல்லம், 20 கிராம் பருப்பு, முந்திரி, திராட்சை ஆகியவை பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. அதன்பின்னர் இந்த திட்டம் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. சில வருடங்களாக பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசு சார்பில் வழக்கமான பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2025-ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு விபரங்களை தமிழக அரசு நேற்று அறிவித்தது. அதாவது, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு, இலவச வேட்டி சேலைகள் வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

முந்தைய ஆண்டுகளில் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரொக்கப்பணமாக ரூ.1,000 வழங்கப்பட்டு வந்த நிலையில், அடுத்த ஆண்டுக்கான பரிசுத்தொகுப்பிலும் ரூ.1,000 இடம்பெறும் என மக்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால், 2025-ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1,000 ரொக்கப்பணம் இடம்பெறாததால், மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

இந்த சூழலில், அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம், பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1,000 ரொக்கப்பணம் இடம்பெறாதது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது;

"கடந்த ஆண்டு புயல், மழையால் ஏற்பட்ட பேரிடர்களுக்கு ரூ.2,028 கோடி செலவிட்டுள்ளோம். பேரிடர்களுக்காக மாநில நிதியில் இருந்து செலவிட்டிருக்கிறோம். பேரிடர் நிவாரண நிதியாக ரூ.37 ஆயிரம் கோடி கேட்டதற்கு ரூ.276 கோடி மட்டுமே மத்திய அரசு தந்தது. மத்திய அரசிடம் அதிகம் கேட்டாலும் சொற்பமாகத்தான் கிடைத்தது. நிதிச்சுமையை தமிழக அரசு ஏற்றது.

பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க ரூ.280 கோடி செலவாகியுள்ளது. நல்ல சூழல் விரைவில் உருவாகும். மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000-ஐ பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வழங்குவது குறித்து பரிசீலிக்கிறோம்."

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com