

புதுடெல்லி,
இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 543 மக்களவை தொகுதிகள் உள்ளன. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 80 தொகுதிகளும், குறைந்தபட்சமாக மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், சண்டிகர், லடாக், லட்சத்தீவு, புதுச்சேரி ஆகியவற்றில் தலா 1 தொகுதிகளும் இருக்கின்றன. தமிழ்நாடு 39 தொகுதிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.
இந்த மக்களவை தொகுதிகள் எல்லாம் நாட்டில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் மக்கள்தொகை கணக்கின் அடிப்படையிலேயே வரையறை செய்யப்படுகின்றன. கடைசியாக 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற்றாலும், 1973-ம் ஆண்டில் இருந்த 543 தொகுதிகளே இன்று வரை இருந்து வருகின்றன.
1976-ம் ஆண்டு தொகுதி வரையறை செய்ய வேண்டிய சூழல் வந்தபோது, அதை அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி 2001-ம் ஆண்டுக்கு தள்ளிவைத்தார். 2001-ம் ஆண்டு தொகுதி வரையறையை மேற்கொள்ள அப்போதைய பிரதமர் வாஜ்பாய் முயன்றபோது, 'குடும்ப கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்திய தென் மாநிலங்களுக்கு இது தண்டனையாகவும், அதைச் செய்யாத வடமாநிலங்களுக்கு பரிசாகவும் அமைந்துவிடும்' என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட வாஜ்பாய், தொகுதி வரையறையை 2026-ம் ஆண்டுக்கு தள்ளிவைத்தார். இப்படியே, 53 ஆண்டுகள் தொகுதி வரையறை தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில், தற்போது மக்கள்தொகை கணக்கின் அடிப்படையில் இல்லாமல், அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவீத இடங்கள் உயர்வு என்ற அடிப்படையில் தொகுதி வரையறையை மேற்கொள்ள இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2029-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இதை அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 80 மக்களவை தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் 120 ஆக அதிகரிக்கும். அதேபோல், 39 தொகுதிகளை கொண்ட தமிழகத்தில், 58 ஆக உயரும். இந்தக் கணக்குப்படி, நாடு முழுவதும் பார்த்தால், மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 543-ல் இருந்து 815 ஆக அதிகரிக்கும்.
ஏற்கனவே, நாட்டில் 2021-ம் ஆண்டு மேற்கொள்ள வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு கொரோனா பரவல் காரணமாக நடைபெறவில்லை. இடையில், 2023-ம் ஆண்டு பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டபோதும், தொகுதி வரையறை செய்யப்படாததால், அதை நடைமுறைப்படுத்த முடியாமல் இருந்து வருகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில்தான், நாடாளுமன்ற மக்களவையில் இன்று தொகுதி மறுவரையறைக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு, தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை.
தற்போதைய 543 மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 815 ஆக உயரும்போது, இந்தி பேசும் 10 வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை 340 ஆக அதிகரிக்கும்.
இதை வைத்து பார்க்கும்போது, மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 408 தொகுதிகள் தேவை என்ற நிலை ஏற்படும். அதில், 83 சதவீதம் அளவுக்கு இந்தி பேசும் மாநிலங்களே தீர்மானிக்கும் என்பதால், தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் முக்கியத்துவம் இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.
தென்மாநிலங்களில் உள்ள 194 எம்.பி.க்கள் ஒன்று சேர்ந்து ஒரு சட்டத்தை எதிர்த்தாலும், மக்களவையில் அது நிறைவேறும் என்ற நிலை உருவாகும். இதனால்தான், தமிழகம் உள்பட பா.ஜ.க. ஆளாத தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
உத்தரபிரதேசம் - 80
மராட்டியம் - 48
மேற்கு வங்காளம் - 42
பீகார் - 40
தமிழ்நாடு - 39
மத்திய பிரதேசம் - 29
கர்நாடகா - 28
குஜராத் - 26
ஆந்திரா - 25
ராஜஸ்தான் - 25
ஒடிசா - 21
கேரளா - 20
தெலுங்கானா - 17
அசாம் - 14
ஜார்கண்ட் - 14
பஞ்சாப் - 13
சத்தீஸ்கர் - 11
ஹரியானா - 10
டெல்லி - 7
உத்தரகாண்ட் - 5
ஜம்மு மற்றும் காஷ்மீர் - 5
இமாச்சல பிரதேசம் - 4
அருணாச்சல பிரதேசம் - 2
கோவா - 2
மணிப்பூர் - 2
மேகாலயா - 2
திரிபுரா - 2
தாத்ரா, நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ - 2
மிசோரம் - 1
நாகாலாந்து - 1
சிக்கிம் - 1
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் - 1
சண்டிகர் - 1
லடாக் - 1
லட்சத்தீவு - 1
புதுச்சேரி - 1