

சென்னை,
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
300 ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பியுள்ள ஆனைமங்கலம் செப்பேடுகள் குறித்து 36 மணி நேரமாக வாய்திறக்காதது ஏன் முதல்வர் விஜய் அவர்களே?
மாபெரும் தமிழ் பேரரசை படைத்த சோழர்களில் சைவ சமயத்தைச் சேர்ந்த மாமன்னர் இராஜராஜ சோழன் ஒரு புத்த விகாரத்துக்காக ஒரு ஊரையே தானம் செய்ததைப் பதிவு செய்யும் விதமாக மாமன்னர் இராஜேந்திர சோழனால் வடிக்கப்பட்ட ஆனைமங்கலம் செப்பேடுகளை, நெதர்லாந்தில் இருந்து நமது பாரதப் பிரதமர் மோடி மீட்டெடுத்துள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு மட்டுமல்ல, தமிழக வரலாற்றையே மீட்டெடுக்கும் அதிமுக்கிய நிகழ்வு.
இந்த நெகிழ்ச்சியான தருணத்தில், தமிழக பாரம்பரியத்தை மீட்டெடுத்தற்காக மத்திய அரசிற்கு நன்றி கூறாவிட்டாலும் பரவாயில்லை, தமிழகத்தின் பிரதிநிதி என்ற தார்மீக முறையில், ஒரு சமூக வலைத்தளப் பதிவைக்கூட நீங்கள் பதிவிடாதது ஏன்? ஒருபுறம், தாயகம் திரும்பிய ஆனைமங்கலம் செப்பேடுகளை நீங்கள் வரவேற்கத் தயாராகாத நிலையில், மறுபுறம் தங்களது கூட்டணிக் கட்சியினர் அதன் வரலாற்றைத் திரித்து வருகின்றனர். இதுதான் தவெக அரசு தமிழக வரலாற்றைப் போற்றும் முறையா?
மொத்தத்தில், தங்களுக்கும் தங்கள் அரசுக்கும் மத்திய அரசுக்கு நன்றி கூற மனமில்லையா? அல்லது, தமிழகத்தின் வரலாற்றையே போற்ற மனமில்லையா? பதிலளியுங்கள் முதல்வரே!”
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.