பசுமை மின் உற்பத்தியில் அக்கறை காட்டாதது ஏன்? - அமைச்சர் நிர்மல்குமாருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

தொடரும் மின்வெட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்து பசுமை மின் உற்பத்தியில் தமிழகத்தை மீண்டும் முதன்மை மாநிலமாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
பசுமை மின் உற்பத்தியில் அக்கறை காட்டாதது ஏன்? - அமைச்சர் நிர்மல்குமாருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
நயினார் நாகேந்திரன்
Published on: 

சென்னை,

ரூ.35-க்கு மின்சாரம் வாங்க காட்டிய அக்கறையை பசுமை மின் உற்பத்தியில் காட்ட தவறியது ஏன் என 'அனைத்து துறை அமைச்சர்' நிர்மல்குமார் விளக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

பசுமை மின் உற்பத்தி

மத்திய மின்சார ஆணையத்தின் ஏப்ரல்–செப்டம்பர் 2026 புள்ளிவிவரப்படி, நாட்டின் ஒட்டுமொத்த பசுமை மின் உற்பத்தி சுமார் 11 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ள நிலையில், தமிழகம் வெறும் 2.1 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது (32,750 மில்லியன் யூனிட்) என்ற செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது. குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் வெகுதூரம் முன்னேறி சென்றுள்ள நிலையில், தமிழகம் மட்டும் பின்தங்கியிருப்பது விஜய் தலைமையிலான தவெக அரசின் எரிசக்தி துறை தோல்வியையே அப்பட்டமாக காட்டுகிறது.

அமைச்சருக்கு தெரியுமா?

மாநிலம் முழுவதும் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு பொதுமக்களும் தொழில் துறையினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், மாநிலத்தின் சொந்த பசுமை மின் உற்பத்தியை பெருக்குவதில் கோட்டைவிட்ட தவெக அரசு, யூனிட் ஒன்றுக்கு ரூ.35 என்ற அதிக விலைக்கு மின் கொள்முதல் ஒப்பந்தம் போடுவதில் மட்டும் அதீத அவசரம் காட்டியது ஏன் என, அனைத்துத் துறை தொடர்பான பிரச்சனைகளுக்கும் தானாக முன்வந்து பதிலளிக்கும் மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் விளக்க வேண்டும். மேலும், தமிழகத்தின் தற்போதைய மின் தேவை எவ்வளவு, மொத்த மின் உற்பத்தி திறன் எவ்வளவு, அதில் உண்மையில் எவ்வளவு மின்சாரம் உற்பத்தியாகிறது என்பதாவது அமைச்சருக்கு தெரியுமா?

மின்வெட்டுக்கு முற்றுப்புள்ளி

எனவே, இனியாவது மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யும் யோசனைகளை தவிர்த்து, காற்றாலை மற்றும் நீர்மின் நிலையங்களை முறையாக பராமரித்து நவீனப்படுத்துதல், சூரிய ஒளி மின் திட்டங்களை விரிவுபடுத்துதல், மின் சேமிப்பு மற்றும் மின் பகிர்மான கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் போன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தொடரும் மின்வெட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்து பசுமை மின் உற்பத்தியில் தமிழகத்தை மீண்டும் முதன்மை மாநிலமாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X