அனைவருக்கும் வீடு திட்டம் நிறைவேறும் வரை யாரும் ஒன்றுக்கு மேற்பட்ட வீடு வாங்க ஏன் தடை விதிக்கக்கூடாது? - ஐகோர்ட்டு கேள்வி

மத்திய அரசின், ‘அனைவருக்கும் வீடு திட்டம்’ முழுமையாக நிறைவடையும் வரை, ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை ஒருவர் வாங்குவதற்கு ஏன் தடை விதிக்கக்கூடாது? என்று மத்திய, மாநில அரசுகளுக்கு, சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
அனைவருக்கும் வீடு திட்டம் நிறைவேறும் வரை யாரும் ஒன்றுக்கு மேற்பட்ட வீடு வாங்க ஏன் தடை விதிக்கக்கூடாது? - ஐகோர்ட்டு கேள்வி
Published on

சென்னை,

கோவை மாவட்டத்தில், 369 ஏக்கரில் துடியலூர்-வெள்ளக்கிணறு வீட்டு வசதித் திட்டத்தை கடந்த 1996-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் உருவாக்கியது. இதற்காக தனியாருக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தியது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், நிலத்தின் உரிமையாளர்கள் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, நிலத்தை கையகப்படுத்துவது குறித்து அதிகம் விற்பனையாகும் பத்திரிகைகளில் அரசு விளம்பரம் செய்யவில்லை. அதனால், நிலத்தை கையகப்படுத்தியது செல்லாது என்று கடந்த 2008-ம் ஆண்டு உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் விசாரித்து, மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். தனி நீதிபதியின் உத்தரவையும் உறுதி செய்தனர்.

இதுகுறித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், வீட்டு வசதி குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பினர். அந்த உத்தரவில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-

மனித குலத்துக்கு குடியிருக்க வீடு கண்டிப்பாக வேண்டும். இந்தியாவில் வீட்டு வசதிதான் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. நாட்டில் பல மில்லியன் மக்கள் வீடுகள் இல்லாமல் உள்ளனர். மில்லியன் கணக்கான குழந்தைகள் தெருவோரம் வசிக்கின்றனர்.

2017-18-ம் ஆண்டுகளில் வருமான வரிச் செலுத்தியவர்கள் தாக்கல் செய்த விவரங்களின் அடிப்படையில் பத்திரிகைகள் ஆய்வு கட்டுரைகள் வெளியிட்டுள்ளது. அதில், நாட்டில் 1 கோடியே 14 லட்சம் பேர் ஒரு வீடு வைத்துள்ளனர் என்றும் 6 ஆயிரத்து 537 பேர் ஒன்றுக்கு மேற்பட்ட சொந்த வீடுகளை வைத்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் நம் மக்கள் வரி செலுத்துவதை தவிர்ப்பதற்காக தங்களுக்கு சொந்த வீடுகள் எத்தனை உள்ளது? என்ற உண்மை விவரங்களை வருமான வரித்துறைக்கு தெரிவிக்காமல் மறைக்கின்றனர் என்பது நன்றாக தெரிகிறது.

வசிப்பிடம் என்பது மக்களுக்கு அடிப்படை தேவையாகும். ஆனால், இங்கு பலருக்கு அந்த வசதி கிடைக்கவில்லை. ஏற்கனவே நம் நாட்டில் மக்கள் தொகை 130 கோடியை தாண்டிவிட்டது. லட்சக்கணக்கான மக்கள் சாலையோர நடைபாதைகளிலும், ராட்சத பைப்புகளுக்கு உள்ளேயும், மரங்களுக்கு கீழும் வசிக்கின்றனர். மத்திய அரசும் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இந்த திட்டத்தை விரைவாக அமல்படுத்த வேண்டும். எனவே, ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை சொந்தமாக வைத்திருப்பவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கும்போது, பிறருக்கு அது நன்மையை ஏற்படுத்தும்.

ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வாங்க முழு உரிமை உள்ளது. அதேநேரம் வீடுகள் இல்லாதவர்களின் நிலையையும் கருத்தில் கொள்ளவேண்டும். எனவே, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றும் வரை, ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை மக்கள் வாங்குவதை தடுக்க சில நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். அதற்கான அதிகாரம் அரசுக்கு உள்ளது.

நிறைய பணம் வைத்திருப்பவர்கள், வீடுகளை வாங்குவதற்கு பதில், அதை வங்கியில் டெபாசிட் செய்யட்டும். ஒரு குடும்பத்துக்கு ஒரு படுக்கை அறையுடன் கூடிய வீடு போதுமானது. குழந்தைகள் எதிர்காலத்துக்காக கூடுதலாக ஒரு வீடு வாங்க அனுமதிக்கலாம். அதற்காக கூடுதல் கட்டணத்தையும் வசூலிக்கலாம். ஆனால், 3-வது வீடு அல்லது அதற்கு மேல் வீடுகளை சொந்தமாக வாங்க தடை விதிக்கவேண்டும். இதன்மூலம் வீடுகளின் விலை குறைவது மட்டுமல்லாமல், எளியவர்களும் வீடுகளை வாங்கக்கூடிய நிலை ஏற்படும். அதுமட்டுமல்ல, ரியல் எஸ்டேட் புரோக்கர்கள், விவசாய நிலங்களை வீட்டுமனையாக மாற்றுவதை தடுக்க முடியும். விவசாய நிலங்களும் பாதுகாக்கப்படும். எனவே, 2-க்கும் மேற்பட்ட வீடுகளை சொந்தமாக வைத்திருப்பவர்கள், எந்த வருமானத்தின் அடிப்படையில் அந்த சொத்தை வாங்கினார்? என்பதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் புலன்விசாரணை செய்யவேண்டும். இதுபோன்ற கட்டுப்பாடுகளினால் நிலம், நீர், மரம் உள்ளிட்ட இயற்கை வளங்களும் பாதுகாக்கப் படும்.

இதனால், இந்த வழக்கில், மத்திய வீட்டு வசதி அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகத்தின் செயலாளர்களை எதிர்மனுதாரர்களாக தாமாக முன்வந்து சேர்க்கிறோம். அவர்கள் கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் சொந்த வீடுகள் வைத்திருப்பவர்கள் எத்தனை பேர்? ஜனத்தொகை மற்றும் வீடுகளின் எண்ணிக்கையின் விகிதாசாரம் என்ன? அனைவருக்கும் வீடு என்ற மத்திய அரசின் திட்டம் எப்போது முழுமையாக நிறைவடையும்? இந்தியாவில் எத்தனை குடும்பங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வைத்துள்ளன? இந்த விவரங்கள் அரசிடம் உள்ளதா? ஒருவேளை இந்த விவரங்கள் இல்லை என்றால், ஒரு குடும்பம், தனிநபர் எத்தனை வீடுகள் வைத்துள்ளனர்? என்ற கணக்கெடுப்பை மத்திய, மாநில அரசுகள் ஏன் மேற்கொள்ளக்கூடாது?

மத்திய அரசின், அனைவருக்கும் வீடு திட்டம் முழுமையாக நிறைவடையும் வரை, ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை தனிநபர்கள் மற்றும் குடும்பத்தினர் வாங்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் ஏன் தடை விதிக்கக்கூடாது? 100 சதவீத கட்டணம் அல்லது கூடுதல் முத்திரைத்தாள் கட்டணத்தை விதித்து, இரண்டாவது வீடுகளை தனிநபர் வாங்குவதை ஏன் தடுக்கக்கூடாது?

ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வாங்குபவர்களுக்கு சொத்துவரி, மின்சார கட்டணம், குடிநீர் மற்றும் கழிவுநீர் வெளியேற்றல் கட்டணம் ஆகியவற்றை நூறு சதவீதம் ஏன் கூடுதலாக வசூலிக்கக்கூடாது? முதல் கட்டமாக நகர் பகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளை தனிநபர், குடும்பத்தினர் வாங்கக்கூடாது என்ற தடை உத்தரவை ஏன் அமல்படுத்தக்கூடாது? ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வாங்க கடன் கொடுக்கக்கூடாது என்று நிதி நிறுவனங்களுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது?

சொத்துகளின் விலையை குறைக்கும் விதமாக, வெளிநாட்டில் நிரந்தரமாக குடியுரிமை பெற்று வசிக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், இந்தியாவில் சொத்துகள் வாங்க ஏன் தடை விதிக்கக்கூடாது? இந்த கேள்விகளுக்கு எல்லாம் வருகிற மார்ச் 6-ந்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com