400க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில், தேர்தல் அறிக்கை தயாரிப்பது ஏன்? - நயினார் கேள்வி

தேர்தல் அறிக்கை நாடகக் கம்பெனி திவாலாகும் நாள் தொலைவிலில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில், ஆசிரியர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் எனப் பலரும், திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி தெருத்தெருவாகப் போராடிவரும் வேளையில், ஒய்யாரமாகக் குளிர்சாதன அறையில் அமர்ந்து, அடுத்த தேர்தலுக்கான அறிக்கையை திமுக
தயாரிப்பது, ரோம் பற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாகத் தான் இருக்கிறது.
கடந்த 2021 திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளில் 400-க்கும் மேற்பட்டவை நிறைவேற்றப்படாத நிலையில், புதிய தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க வேண்டிய அவசியமென்ன? ஒரு வேளை நிறைவேற்றாமல் காற்றில் பறக்கவிட்ட வாக்குறுதிகளைக் கண்டுபிடித்து அதை வைத்தே மீண்டும் ஒரு அறிக்கை தயாரிக்க அமைக்கப்பட்ட குழு இதுவோ? அல்லது, வேறென்னென்ன டுபாக்கூர் வாக்குறுதிகளைக் கொடுத்து மக்கள் காதில் பூ சுற்றலாம் எனத் திட்டமிடுவதற்கான குழு இதுவோ எனும் சந்தேகம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.
சரி, போட்டோஷூட் கூட்டத்தின் குறிக்கோள் எதுவாக இருந்தால் என்ன! எல்லாம் இன்னும் கொஞ்ச நாட்கள்தான்! 'நாடு போற்றும் நல்லாட்சி' என்னும் போர்வையில் வாக்குறுதியை வைத்து நாடகமாடும் திசைதிருப்பு கோஷ்டியின் கூடாரத்தைத் தமிழக மக்கள் கலைந்தெறியும் நாள் ஒன்றும் தொலைவில் இல்லை!”
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.






