

சென்னை,
தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;
விசிகவுக்கும் திமுகவுக்கும் இடையே கொள்கை புரிதல் உண்டு. விசிக எடுத்த முடிவுக்கு பதவி ஆசை காரணம் இல்லை. விசிக உயர்நிலை கூட்டத்தில் தவெகவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என முடிவு எடுத்த பிறகு, அமைச்சரவையில் பங்கு என்றும் நிர்வாகிகள் தெரிவித்தார்கள். அமைச்சரவையில் பங்கு குறித்து பொதுச்செயலாளர்களிடம் ஆலோசித்தோம். அப்போது அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என தவெக தரப்பில் இருந்து அழைப்பு வந்தது. நான் அமைச்சராக தவெக விரும்பியது. அமைச்சராக எனக்கு உடன்பாடு இல்லை.
கட்சியின் நலன் கருதி அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து முடிவெடுத்தோம். 30 ஆண்டுகளுக்கும் மேல் என்னுடம் பணியாற்றி வந்த வன்னி அரசை அமைச்சராக்க முடிவெடுத்தோம்.
தேர்தலுக்கு முன்பு என்னை குறி வைத்து எவ்வளவோ தூண்டியும் கூட, திமுக கூட்டணி பலவீனப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஆனால் தேர்தலுக்கு பின் கூட்டணியை காக்கும் நிலையில் நான் இல்லை. காங்கிரஸ் எடுத்த முடிவையும் கம்யூனிஸ்டுகள் எடுத்த முடிவையும் என்னால் தடுக்க முடியாது.
மு.க.ஸ்டாலினிடம் இசைவு பெற்ற பிறகே தவெகவுக்கு ஆதரவு அளித்தோம். நாங்கள் எடுத்த முடிவை ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் எதிராக பார்க்கவில்லை. தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதே எனது எண்ணம். ஆனால் அதையும் தாண்டி அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து கட்சி முடிவெடுக்கிறது. கட்சியின் முடிவுக்கு கட்டுப்படுவது எனது கடமை.
மிக மிக நிதானமாக முடிவெடுத்துள்ளோம். சிலர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அதை பொருட்படுத்தவில்லை. எங்களின் நம்பகத்தன்மையை கலங்கடிப்பது திட்டமிட்ட அவதூறு. எங்கள் நேர்மையை கலங்கடிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. அமைச்சரவையில் இடம் பெறுவது என்பது காலத்தின் கட்டாயம். காலத்தின் கட்டாயத்தால் கூட்டணி ஆட்சி ஏற்பட்டுள்ளது. தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை விரும்புகிறார்கள். அமைச்சரவையில் இடம் பெற்றது குறித்து மேற்கொண்டு கருத்து சொல்ல எதுவுமில்லை. ”
இவ்வாறு அவர் கூறினார்.