அனிதா நினைவேந்தல் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு ஏன்? - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி

அனிதா மரணத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்று உதயநிதி தெரிவித்தார்.
அனிதா நினைவேந்தல் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு ஏன்? - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி
Published on

சென்னை,

அனிதாவின் 9-ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டத்திற்கு அரசு அனுமதி மறுத்த விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

நினைவேந்தல் நிகழ்ச்சி

அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு மற்றும் அனிதாவின் குடும்பம் சார்பில் அமைதியான நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏன் அனுமதி வழங்கவில்லை. பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய கொடியேற்றம் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட சூழலில், ஜனநாயக ரீதியில் அமைதியாக நடைபெற இருந்த அனிதாவின் நினைவேந்தல் கூட்டத்துக்கு அரசு அனுமதி கொடுக்காதது ஏன்?.

பெசன்ட் நகர் மாதா கோவிில் கொடியேற்றத்தைக் காரணம் காட்டி அனிதாவின் 9ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. ஆனால், அங்கு அந்த அளவில் கூட்டம் இல்லை; உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். அல்லது மாற்று இடத்தை கொடுக்க வேண்டும். அனிதா மரணத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் தனக்கு இல்லை” என்று தெரிவித்தார்.

அனிதா நினைவு நாள்

அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளை கருத்தில் கொண்டே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதில் எந்தவித அரசியலும் இல்லை. எனினும், நினைவேந்தல் கூட்டத்தை நடத்துவதற்கு ஏதுவான மாற்று இடத்தை தேர்வு செய்ய அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பெசிய அவர், “இன்றைய நாள் தங்கை அனிதா நினைவு நாள். தன்னுடைய கோரிக்கைக்காக சுப்ரீம்கோர்ட்டு வரை சென்று கோரிக்கை நிறைவேறாததால் உயிரிழந்தார். 3 மாநில முதல்வர்கள் நீட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசு நீக்கவில்லை.

வரக்கூடிய காலங்களில் தேர்தல் சூழ்நிலை மாறும் நிலையில், உறுதியாக மாறும். 2029ல் தேர்தல் சூழ்நிலை மாறும் போது, சட்டமன்றத்தில் ஒலித்த குரல், பாராளுமன்றத்தில் நீட் தூக்கி எறியப்படும் நாளாக மாறும். அனிதாவின் தியாகம், கண்ணீர், உழைப்பு, உணர்வு நிறைவேறும்” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

ஆதவ் அர்ஜுனாவுக்கு அறிவுரை

முன்னதாக அனிதாவின் நினைவு நாள் நினைவேந்தலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து எதிர்கட்சி தலைவர் உதயநிதி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தன் பேச்சின் நிறைவில், "அனிதாவின் நினைவு நாளான இன்றாவது, அரசியல் செய்ய வேண்டாம்" என கூற, திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உடனே குறிக்கிட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், "அரசின் கவனத்திற்கு எதிர்கட்சி தலைவர் கொண்டு வந்துள்ளார், அத்தோடு அதை முடித்துவிடவும்" என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு அறிவுரை வழங்கினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com