சிக்கன் ரைஸில் விஷம் கலந்து கொடுத்தது ஏன்? கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம்

தாத்தா நேற்று உயிரிழந்த நிலையில், தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிக்கன் ரைஸில் விஷம் கலந்து கொடுத்தது ஏன்? கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம்
Published on

நாமக்கல்,

நாமக்கல்லில் ஓட்டலில் சிக்கன் ரைஸ் வாங்கி தனது தாய் மற்றும் தாத்தாவுக்கு விஷம் கலந்து கொடுத்து கொன்றதாக என்ஜினீயரிங் மாணவர் பகவதியை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் விவரம் வருமாறு:-

எனக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருந்தது. அதை அறிந்த எனது தாயார் நதியா மற்றும் தாத்தா சண்முகநாதன் ஆகியோர் பெண்களுடனான பழக்கவழக்கத்தை கைவிடுமாறு அறிவுறுத்தினர். ஆனால் நான் பெண்களுடன் இருந்த பழக்கத்தை கைவிடாமல் இருந்ததால், என்னை கண்டித்தனர். அதனால் ஆத்திரமடைந்த நான், தாயார் நதியா மற்றும் தாத்தா சண்முகநாதனை கொலை செய்ய திட்டமிட்டேன்.

இதற்காக கடந்த 27-ந் தேதி பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்திருந்தேன். பின்னர் 30-ந் தேதி நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் வாங்கி, அதில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து தாயார் நதியா மற்றும் தாத்தா சண்முகநாதனிற்கு கொடுத்துவிட்டேன்.

அதை சாப்பிட்ட இருவருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு அவர்களுக்கு சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக கூறி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்து விட்டேன். ஆனால் உணவு மாதிரியை பகுப்பாய்வு மையத்துக்கு ஆய்வுக்காக அனுப்பி, அதில் விஷம் கலந்திருந்ததை போலீசார் கண்டுபிடித்துவிட்டனர். அதைத்தொடர்ந்து என்னிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தாத்தா மற்றும் தாயாருக்கு விஷம் கலந்த உணவை கொடுத்ததை ஒப்புக்கொண்டேன்." என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட மாணவர் பகவதி நாமக்கல் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் கோர்ட்டு உத்தரவின் பேரில் பகவதியை காவலில் வைக்க சேலம் மத்திய சிறைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com