குமரியில் பரவலாக மழை

குமரி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
குமரியில் பரவலாக மழை
Published on

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

மழை

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் மற்றும் மலையோர பகுதிகளில் லேசான மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்தது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பொழிவு இருந்தது. நாகர்கோவில், சுசீந்திரம், ஆரல்வாய்மொழி, சாமிதோப்பு, கொட்டாரம், மயிலாடி, கீரிப்பாறை, தடிக்காரன்கோணம், தக்கலை, இரணியல் உள்பட பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை வழக்கம் போல வெயில் அடித்தது. ஆனால், 10 மணி அளவில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. அதன்பிறகு மழை பெய்ய தொடங்கியது. முதலில் சாரலாக பெய்த மழை, நேரம் செல்லச் செல்ல சற்று பலத்த மழையாக பெய்தது.

சாலைகளில் தண்ணீர்

பின்னர், விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அந்த வகையில் அவ்வை சண்முகம் சாலை, கோர்ட்டு ரோடு, கேப் ரோடு, கே.பி. ரோடு, செம்மாங்குடி சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த இந்த மழையால் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்லும் பணியாளர்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள்.

குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் சிற்றார் 1-2.2, பேச்சிப்பாறை-4.2, பெருஞ்சாணி-3 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது. மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து உள்ளது.

அணைகளுக்கு நீர்வரத்து

அந்த வகையில் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 607 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 132 கனஅடி தண்ணீரும், சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 80 கனஅடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 584 கனஅடியும், பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 350 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com